சுகாதார உணவு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்
கொடைக்கானலில் சுகாதார உணவு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
உணவு பாதுகாப்பு துறை சார்பில் கொடைக்கானலில் சுகாதார உணவு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் கண்காட்சி நடைபெற்றது. முதலில் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்துகொண்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு ஆர்.டி.ஓ. முருகேசன் தலைமை தாங்கி, ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன், நகராட்சி தலைவர் செல்லத்துரை, துணைத்தலைவர் மாயக்கண்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிரையண்ட் பூங்கா வளாகத்தில் இருந்து தொடங்கி ஊர்வலம், ஏரிச்சாலை வழியாக சென்று 7 ரோடு சந்திப்பில் உள்ள தனியார் விடுதியில் நிறைவடைந்தது. இதில், நகராட்சி பணியாளர்களும் கலந்துகொண்டனர். ஊர்வலத்தின்போது 'வலிமையான பாரதம், ஆரோக்கியமான உணவு' என்ற கோஷத்துடன், சுகாதார உணவு குறித்து மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர் காய்கறிகள், பழ வகைகள், தானிய வகைகளின் பெயர்கள், அதில் கிடைக்கும் சத்துக்கள் குறித்த விளக்கத்துடன் கூடிய பலகைகள் வைக்கப்பட்டு கண்காட்சி நடத்தப்பட்டது. இதனை மாணவ-மாணவிகள் பார்வையிட்டனர். முடிவில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் லாரன்ஸ் நன்றி கூறினார்.