பூந்தமல்லி அரசு ஆஸ்பத்திரியில் சுகாதாரத்துறை செயலாளர் ஆய்வு

பூந்தமல்லியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சுகாதாரத்துறை செயலாளர் ககன் தீப்சிங் பேடி திடீரென ஆய்வு மேற்கொண்டார்.;

Update:2023-10-17 14:04 IST

பூந்தமல்லியில் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று சுகாதாரத்துறை செயலாளர் ககன் தீப்சிங் பேடி ஆய்வு செய்தார். அப்போது ஆஸ்பத்திரியில் உள்ள சுகாதார வசதிகள், கழிவறைகள் மற்றும் மருந்துகள் எப்படி உள்ளது? என ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு உரிய மருத்துவம் பார்க்கப்படுகிறதா?, உணவுகள் முறையாக வழங்கப்படுகிறதா? என்பது குறித்தும் கேட்டறிந்தார்.

தற்போது ஆஸ்பத்திரியில் குழந்தை பெற்ற பெண்கள் தங்கி சிகிச்சை பெறும் அறைகள் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. அவற்றை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். ஆஸ்பத்தியில் சேதமான தண்ணீர் குழாய்களை சீரமைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தவிட்டார்.

நோயாளிகளுக்கு வழங்கக்கூடிய உணவை அவர் சாப்பிட்டு பார்த்து அதன் தரத்தை சோதித்தார். பின்னர் ஆஸ்பத்திரியை முறையாக பாராமரிக்க வேண்டும் எனவும், அடிப்படை வசதிகள் சரியாக இல்லை எனவும் டாக்டர்களையும், அதிகாரிகளையும் கடிந்து கொண்டார்.

பின்னர் பூந்தமல்லி அடுத்த திருமழிசை பகுதியில் கட்டப்பட்டு வரும் விபத்தில் சிக்க கூடியவர்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய ஆஸ்பத்திரி பணிகளை ஆய்வு செய்தார்.

இதேபோல் ஆவடி மாநகராட்சியில் ரூ.38 கோடியில் அனைத்து வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு ஆஸ்பத்திரி கட்டுமான பணிகள் 95 சதவீதம் முடிவடைந்து உள்ளது. அதனையும் ககன்தீப் சிங் பேடி ஆய்வு செய்தார். புதிய ஆஸ்பத்திரியில் கட்டப்பட்டுள்ள ஒவ்வொரு அறைகளுக்கும் சென்று பார்வையிட்டார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் கூறும்போது, "அடுத்த மாத இறுதிக்குள் இந்த புதிய மருத்துவ கட்டிடம் திறக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும். தமிழகத்தில் மருந்து பற்றாக்குறை இல்லை. அடுத்த 2 ஆண்டுகளுக்கு தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளது" என்றார்.

பின்னர் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியிலும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்