கிடப்பில் போடப்பட்ட சுகாதார வளாக கட்டுமான பணி
கிடப்பில் போடப்பட்ட சுகாதார வளாக கட்டுமான பணி நடந்தது.
மங்களமேடு:
மங்களமேடு அருகே கிடப்பில் போடப்பட்ட சுகாதார வளாகம் கட்டுமான பணியை, மீண்டும் தொடங்கி விரைந்து முடிக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மங்களமேட்டை அடுத்துள்ள அகரம்சீகூர் ஊராட்சியில் உள்ள காலனி பகுதியில் சமுதாய சுகாதார வளாக கட்டிடம் கட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இதையடுத்து அகரம்சீகூர் புதிய காலனி பகுதியில் உள்ள பொது இடத்தில் சுகாதார வளாகம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கின. ஆனால் அந்த பணிகளை சிலர் தடுத்ததால், கட்டுமான பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அகரம்சீகூர் கிழக்கு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் முன்பகுதிைய திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தும் நிலை உள்ளது. இதனால் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் அந்த வழியாக செல்பவர்களும் துர்நாற்றத்தால் அவதிப்படுகின்றனர்.
தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக அப்பகுதியில் சுகாதார கேடு ஏற்பட்டு, நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும், கழிவறையின்றி பொதுமக்கள் அவதிப்படுவதாகவும் கூறப்படுகிறது. எனவே சுகாதார வளாக கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.