தலைமை ஆசிரியர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்

தலைமை ஆசிரியர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் நடந்தது.

Update: 2023-09-09 19:51 GMT

தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் அன்பரசன் தலைமை தாங்கினார். மாநில பொது செயலாளர் மாரிமுத்து மற்றும் மாநில பொருளாளர் இளங்கோ ஆகியோர் சங்க செயல்பாடு குறித்து பேசினர். முன்னதாக மாவட்ட தலைவர் அழகிரிசாமி வரவேற்று பேசினார். முடிவில் அமைப்புச் செயலாளர் நவநீதகிருஷ்ணன் நன்றி கூறினார்.

கூட்டத்தில் 2018-ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பிறகு பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியரிலிருந்து பணிமாறுதல் மூலம் உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர்களாக பணிபுரிபவர்களுக்கு பணி நிலையில் மற்றும் எதிர்கால பதவி உயர்வில் எந்த பாதிப்பும் ஏற்படாத வண்ணம் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், அனைத்து அரசு உயர்நிலைப் பள்ளிகளிலும் 8 பட்டதாரி ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட வேண்டும், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கும் மின் கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும், 12 மாதங்கள் மகப்பேறு விடுப்பில் செல்லும் ஆசிரியைகளுக்கு பதிலாக பகுதி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்