ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ஹரிஹரன்: கட்சியிலிருந்து நீக்கிய த.மா.கா.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ஹரிஹரன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

Update: 2024-07-18 07:48 GMT

சென்னை,

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி சென்னையில் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பெரம்பூர் அயனாவரத்தில் அவர் புதிதாக கட்டிவரும் வீடு அருகே வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் அவரை வெட்டி சாய்த்துவிட்டு தப்பி ஓடினர். தமிழகம் முழுவதும் இந்த படுகொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த ஆண்டு பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குப்பழி வாங்கும் வகையில் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இந்த வழக்கில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, திருவேங்கடம், அருள் உள்ளிட்ட 11 பேர் கொலை நடந்த அன்றைய இரவே கைது செய்யப்பட்டனர். 11 பேரையும் 5 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடந்தது. அப்போது, போலீசார் பிடியில் இருந்து தப்பியோடிய கொலையாளி திருவேங்கடம் என்கவுண்ட்டர் முறையில் போலீசாரால் சுட்டு வீழ்த்தப்பட்டார். போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டபோது பதிலுக்கு தற்காப்புக்காக போலீசார் சுட்டதில் திருவேங்கடம் உயிரிழந்தார். இதர 10 கொலையாளிகளும் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், கொலையாளிகளுக்கு ரூ,50 லட்சத்தில் இருந்து ரூ,1 கோடி வரை பணம் கைமாறியுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியானது. கொலையாளி அருளின் வங்கி கணக்கில் மட்டும் ரூ,50 லட்சம் போடப்பட்டதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. மேலும், கொலையாளி அருளோடு தொடர்பில் இருந்தவர்கள் யார் என்பது குறித்து அவரது செல்போன் அழைப்பை வைத்து போலீசார் விசாரித்தார்கள். இந்த நிலையில் நேற்று பெண் வக்கீல் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

அவர்களில் கைதான பெண்ணின் பெயர் மலர்கொடி (வயது 45) என்றும், சென்னை பாடர்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் என்றும் மலர்கொடி வக்கீலாக பணியாற்றுகிறார் என்றும் போலீசார் தெரிவித்தனர். கைதானவரில் மற்றொருவர் பெயர் ஹரிஹரன் என்றும், புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த அவரும் வக்கீல் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுதவிர திருநின்றவூரை சேர்ந்த சதீஷ் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கைதான அருளின் அக்காள் மகன் ஆவார். கொலையாளிகளுக்கு வாகனங்களை இவர் ஏற்பாடு செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது. கைதான 2 வக்கீல்களும் நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக வடசென்னை மேற்கு மாவட்ட பா ஜனதா மகளிரணி செயலாளர் அஞ்சலை என்பவரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஹரிஹரன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்ட அறிக்கையில், "தமிழ் மாநில காங்கிரஸ் இயக்க மாநில மாணவரணி துணைத்தலைவர் பதவியில் இருந்து ஏற்கனவே நீக்கப்பட்ட கே.ஹரிஹரன், இயக்க விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் இன்று முதல் த.மா.கா வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுகிறார்" என்று அதில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட திருவல்லிக்கேணி மேற்கு பகுதி அ.தி.மு.க. இணைச் செயலாளர் மலர்க்கொடி, அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்று நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்