'வீடியோ கால்' செய்து நிர்வாணமாக தோன்றி பாலியல் தொல்லை.. ஐகோர்ட்டு போட்ட அதிரடி உத்தரவு
வீடியோ காலில் நிர்வாணமாக தோன்றி அங்கன்வாடி பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை கைது செய்ய வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த அங்கன்வாடி பெண் பணியாளர் ஒருவருக்கு கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 'செல்போனில் வீடியோ கால்' வந்தது. அதை ஆன் செய்தபோது, எதிர்பக்கம் ஒரு ஆண் நிர்வாணமாக நின்று ஆபாசமாக பேசியுள்ளார். இதையடுத்து போலீசில் பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் புகாரளிக்கப்பட்டது. போலீசார் விசாரணையில் முன்னேற்றம் இல்லாததால் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணை கேட்டு சென்னை ஐகோர்ட்டில் அந்த பெண் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது கோர்ட்டில் போலீஸ் தரப்பில் அளித்த பதிலில் கூறப்பட்டதாவது: புகார் தாரருக்கு வந்த தொலைபேசி எண்ணை கொண்டு விசாரித்ததில், அது திண்டுக்கல்லைச் சேர்ந்த லாரி டிரைவர் வசந்தராஜன் என்பவரது எண் என்று தெரியவந்தது. திருமணமான அவர் மனைவியை பிரிந்து வாழ்வது தெரியவந்தது. வசந்தராஜன் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். நேர்மையாக, வெளிப்படையாக இந்த வழக்கை விசாரித்து வருவதால், சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றத் தேவையில்லை" என்று கூறப்பட்டு இருந்தது.
நாகை மாவட்டத்தைச் சேர்ந்த அங்கன்வாடி பெண் ஊழியர்கள் பலருக்கு இதுபோல அந்த நபர் நிர்வாண வீடியோ கால் செய்து ஆபாசமாக பேசியுள்ளார் எனவே, அந்த நபருக்கு இந்த எண்கள் எப்படி கிடைத்தது என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என்று வாதிட்டார். இரு தரப்பு வாதத்தையும் கேட்டுக்கொண்ட நீதிபதி, இந்த வழக்கின் போலீஸ் விசாரணை நாகப்பட்டினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வையில் நடைபெறவேண்டும். குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்யவேண்டும் என்று உத்தரவிட்டார். வழக்கின் விசாரணை அடுத்த மாதம் 11-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.