குடும்பத்துடன் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
நூறுநாள் வேலை திட்டத்தில் கூலி வழங்காததை கண்டித்து விழுப்புரம் மாவட்டத்தில் 5 இடங்களில் மாற்றுத்திறனாளிகள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விழுப்புரம்;
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் நேற்று காலை விழுப்புரம் ரெயில் நிலையம் அருகில் குடும்பத்துடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் மகாலிங்கம், திருநாவுக்கரசு, ஏழுமலை, மணிகண்டன், மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் கலியபெருமாள் கண்டன உரையாற்றினார்.
கோரிக்கைகள்
மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் 50 நாட்கள் வேலை செய்தும் கூலி கிடைக்காமல் அவதிப்படும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் இதர பணியாளர்களுக்கும் உடனடியாக சம்பள தொகையை வழங்க வேண்டும், காலதாமதமான நாட்களுக்கு தாமத கட்டணத்தை சேர்த்து வழங்க வேண்டும், நூறு நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கான நிதியை காலதாமதம் செய்யாமல் உடனடியாக மத்திய அரசு விடுவிப்பு செய்ய வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் ஒன்றிய நிர்வாகிகள் அண்ணாத்துரை, காசிநாதன், கவுரி, மும்மூர்த்தி, அன்பழகன், குரளரசன், டில்லிபாஷா, சுதா உள்பட பலர் தங்கள் குடும்பத்தினருடன் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
விக்கிரவாண்டி
விக்கிரவாண்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விழுப்புரம் மாவட்ட துணை தலைவர் அய்யனார் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வக்கீல் சங்கரன், மாவட்ட பொருளாளர் ஜெயக்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் ஒன்றிய செயலாளர் பிரபு, பேரூராட்சி கிளை அமைப்பாளர் ரங்கபாபு, ஒன்றியக்குழு சங்கீதா மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
திண்டிவனம்
இதேபோல் திண்டிவனத்தில் ஒன்றிய தலைவர் மணிகண்டன் தலைமையிலும், கண்டாச்சிபுரத்தில் வட்ட செயலாளர் முருகன் தலைமையிலும், திருச்சிற்றம்பலம் கூட்டுசாலையில் மாவட்ட துணைத்தலைவர் வேணுகோபால் தலைமையிலும் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.