ஹமூன் புயல்: 9 துறைமுகங்களில் 2 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
ஹமூன் புயல் காரணமாக 9 துறைமுகங்களில் 2 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.;
சென்னை,
சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற கூடும்.
புயலாக வலுப்பெற்று வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து நாளை (25-ந்தேதி) அதிகாலை வங்காளதேசம் டிங்கோனா தீவு-சந்திவிப் இடையே கரையை கடக்கும். இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் வரும் 27-ந்தேதி வரை 5 நாள்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மேலும் தென் கிழக்கு, மத்திய கிழக்கு வங்க கடல், ஒடிசா, மேற்கு வங்க கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று தெரிவித்தது.
இந்த சூழலில், ஹமூன் புயல் அதிதீவிர சூறாவளி புயலாக வலுப்பெற்று உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்து உள்ளது. இந்த புயல் ஒடிசாவிற்கு கிழக்கு, தென்கிழக்கே 210 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. நாளை நண்பகலில் ஆழமான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வங்கதேசத்தில் கெபுரா - சிட்டகாங் இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காற்றின் வேகம் அதிகமாக உள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, கடலூர், தூத்துக்குடி, எண்ணூர், காட்டுப்பள்ளி, நாகை, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன் ஆகிய 9 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.