ரூ. 1 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் அறிவுசார் மையம்
ரூ. 1 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் அறிவுசார் மையம் அமைக்கப்பட உள்ளதாக நகரசபை கூட்டத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
காரைக்குடி,
ரூ. 1 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் அறிவுசார் மையம் அமைக்கப்பட உள்ளதாக நகரசபை கூட்டத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
நகரசபை கூட்டம்
காரைக்குடி நகரசபை கூட்டம் அதன் தலைவர் முத்துத்துரை தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் குணசேகரன் முன்னிலை வகித்தார். ஆணையாளர் லெட்சுமணன் மற்றும் அதிகாரிகள், நகரசபை உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:- துணைத்தலைவர் குணசேகரன், கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கண்ணதாசன் மணி மண்டப வளாகத்தில் ரூ.1 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டில் அறிவு சார் மையம் (நவீன மேம்படுத்தப்பட்ட நூலகம்) அமைய நடவடிக்கை மேற்கொண்ட நகர் மன்ற தலைவருக்கு மன்ற உறுப்பினர்கள் சார்பில் சார்பில் நன்றி.
காரைக்குடி நகரில் பல்வேறு இடங்களில் 40 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கும் ஏழை மக்கள் வீட்டு வரி, மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, சாலை வசதி, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு அனைத்தையும் பெற்றிருந்தும் பட்டா மட்டும் வழங்கப்படவில்லை. நீர் நிலை புறம்போக்கு என காரணம் கூறப்படுகிறது.
நடவடிக்கை
விவசாய நிலம், வரத்து கால்வாய், தண்ணீர் எதுவுமே இல்லாத கண்மாயை பாதுகாத்து என்ன பயன்? நீர்நிலை புறம்போக்கு என காரணம் கூறப்பட்ட இடங்கள் தவிர்த்து மற்றவர்களுக்காவது பட்டா வழங்கலாமே, ஏழைகளுக்கு வீட்டு மனைப்பட்டா கிடைக்க நகர் மன்றம் மூலம் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.ஆணையாளர், நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற கோர்ட்டு உத்தரவின்படி வருவாய் துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
பசும்பொன் மனோகரன், எனது வார்டில் ஆக்கிரமிப்பு களுக்கு அதிகாரிகள் சிலர் துணையாக இருக்கின்றனர். ஆணையாளர், நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை அட்ட வணைப்படுத்தி ஆய்வு மேற்கொண்டு, வாரம் ஒரு நாள் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தேவன், மக்கள் விலைவாசி உயர்வு வரிச்சுமைகளால் அல்லல்படும் நேரத்தில் மின் கட்டண உயர்வு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதற்கான எதிர்ப்பை அ.தி.மு.க. சார்பில் மன்றத்தில் பதிவு செய்கிறேன்.
அடிப்படை வசதி
தலைவர் முத்துத்துரை, அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை கொடுத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நகரின் 2 இடங்களில் ரூ. 1 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் நகர் நலமையங்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. நகராட்சி பள்ளிகளின் உட்கட்டமைப்பை சீர்படுத்தி மேம்படுத்தவும், கூடுதல் வகுப்பறைகள் கட்டவும் ரூ. 80 லட்சம் திட்ட மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. கழனிவாசல் வாரச் சந்தை அருகே உள்ள பகுதியில் ரூ.1 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் நவீன மின்மயானம் அமைக்கப்படுவதற்கான ஆயத்தப்பணிகள் நடைபெற்று வருகிறது.
உரக்கிடங்கு
தேவகோட்டை சாலையில் உள்ள கலவை உரக்கிடங்கு வளாகத்தில் நுண் உர செயலாக்க மையம் ரூ. 45 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது. தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் ரூ. 48 லட்சம் மதிப்பீட்டில் சாலையோர வியாபாரிகளுக்கு புதிய வண்டிகள் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.