முகநூல் மூலம் பழக்கம்: வீட்டிற்கு அழைத்த பெண்... தொழில் அதிபருக்கு நேர்ந்த அதிர்ச்சி

கடந்த 3 மாதங்களாக முகநூல் மூலமாக தொழில் அதிபரும், அந்த பெண்ணும் நண்பர்களாக பழகி வந்தனர்.

Update: 2024-05-02 02:00 GMT

நெல்லை,

சேலம் மாவட்டம் அய்யன்பெருமாள்பட்டியைச் சேர்ந்தவர் நித்தியானந்தம் (வயது 47). தொழில் அதிபரான இவர் காற்றாலைகளுக்கு தேவையான உபகரணங்களை வாங்கி மொத்தமாக விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். மேலும் பல்வேறு தொழில்களிலும் ஈடுபட்டுள்ளார். இவர் முகநூல் பயன்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் நெல்லை பாளையங்கோட்டை பெருமாள்புரம் என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்த பானுமதி (40) என்ற பெண், முகநூல் மூலமாக நித்தியானந்தமை தொடர்பு கொண்டார். அவர்கள் கடந்த 3 மாதங்களாக முகநூல் மூலமாக நண்பர்களாக பழகி வந்தனர். இந்த பழக்கத்தை வைத்து பானுமதி அடிக்கடி நித்தியானந்தமுடன் பேசி வந்துள்ளார்.

கடந்த 29-ந்தேதி பானுமதி ஆசைவார்த்தை கூறி நித்தியானந்தத்தை தனது வீட்டிற்கு வரவழைத்தார். பானுமதியின் வீட்டுக்கு சென்ற நித்தியானந்தம் அவரிடம் பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பானுமதியின் கூட்டாளிகள் 4 பேர் திடீரென்று வீட்டுக்குள் புகுந்து நித்தியானந்தமிடம், 'எதற்காக இங்கு வந்தாய்?' என்று கூறி மிரட்டி, அவரை வீட்டில் உள்ள அறையில் அடைத்து வைத்தனர்.

மேலும் அவர் அணிந்து இருந்த 2½ பவுன் தங்க சங்கிலி, ஒரு பவுன் தங்க மோதிரம் மற்றும் ஏ.டி.எம். கார்டு, கிரெடிட் கார்டு ஆகியவற்றையும் பறித்தனர். நித்தியானந்தமின் செல்போன் வங்கி செயலி மூலமாக ரூ.75 ஆயிரத்தையும் பறித்துள்ளனர். அவரது ஏ.டி.எம். கார்டு மூலமாக ரூ.60 ஆயிரத்தை எடுத்துள்ளனர்.

பின்னர் நித்தியானந்தத்தை காரில் கடத்தி சென்று, நெல்லையை அடுத்த பொன்னாக்குடி அருகில் உள்ள ஒரு இடத்தில் வைத்து, தங்களுக்கு பணம் தரவில்லை என்றால் கொன்று விடுவோம் என்று கூறி மிரட்டியுள்ளனர். நித்தியானந்தத்திடம் அவரது வங்கி காசோலையில் கையெழுத்து பெற்று, ரூ.10 லட்சத்தை வங்கியில் இருந்து எடுத்துள்ளனர்.

இதுகுறித்து நித்தியானந்தம் தன்னிடம் வேலை செய்யும் நபரிடம் செல்போனில் தெரிவித்தார். உடனே அவர் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தார். இதையடுத்து தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி, தொழிலதிபர் நித்தியானந்தத்தை கடத்தி நகை-பணம் பறித்த பானுமதியை கைது செய்தனர். கடத்தப்பட்ட நித்தியானந்தமையும் மீட்டனர்.

அவரை கடத்தி நகை-பணம் பறித்ததாக பானுமதியின் கூட்டாளிகளான தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்த பார்த்தசாரதி (46), வெள்ளத்துரை (42), ரஞ்சித் (42), ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த சுடலை (40) ஆகியோரையும் கைது செய்தனர். இவரைப்போல் இன்னும் எத்தனை நபரை இந்த கும்பல் ஆசைவார்த்தை கூறி வீட்டிற்கு அழைத்து மிரட்டி பணம் பறித்தது என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்