சரக்கு வேனில் கடத்த முயன்ற ரூ.5¼ லட்சம் குட்கா பறிமுதல்
பெங்களூருவில் இருந்து சூளகிரிக்கு சரக்கு வேனில் கடத்த முயன்ற ரூ.5¼ லட்சம் மதிப்புள்ள குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சூளகிரி
பெங்களூருவில் இருந்து சூளகிரிக்கு சரக்கு வேனில் கடத்த முயன்ற ரூ.5¼ லட்சம் மதிப்புள்ள குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வாகன சோதனை
பெங்களூருவில் இருந்து சூளகிரி வழியாக குட்கா கடத்துவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அவர் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் தீவிர வாகன சோதனை மற்றும் ரோந்து சென்று கண்காணித்தனர்.
இதனிடையே சூளகிரி போலீசார் நேற்று முன்தினம் இரவு ஒட்டையனூர் மாரியம்மன் கோவில் அருகில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் சரக்கு வேன் ஒன்று கேட்பாரற்று நின்று இருந்தது. போலீசார் அந்த வேனை சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா, பான்பராக் உள்ளிட்டவை இருந்தது தெரிய வந்தது.
குட்கா பறிமுதல்
இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பெங்களூருவில் இருந்து சூளகிரிக்கு குட்கா கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அவற்றின் மதிப்பு ரூ.5 லட்சத்து 23 ஆயிரம் மதிப்பிலான 457 கிலோ குட்கா மற்றும் சரக்கு வேனை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஓசூர் பதிவு எண் கொண்ட அந்த வேனின் உரிமையாளர் மற்றும் டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.