கின்னஸ் சாதனை படைத்த கலைஞர் நூற்றாண்டு மாரத்தான் போட்டி: முதல்-அமைச்சர் பரிசு வழங்கினார்

சென்னையில் 73,206 பேர் பங்கேற்ற கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மாரத்தான் போட்டியானது கின்னஸ் உலக சாதனை படைத்தது. வெற்றி பெற்றவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசு வழங்கினார்.

Update: 2023-08-06 20:39 GMT

சென்னை,

ஆரோக்கியமான தமிழகத்தையும், வலுவான அடுத்த தலைமுறையையும் உருவாக்கிடும் நோக்கத்தில் இளைஞர்களிடையே உடற்பயிற்சிக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நினைவாக ஆண்டு தோறும் மாரத்தான் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மாரத்தான் போட்டி நேற்று நடத்தப்பட்டது.

இதில் 4 பிரிவுகளில் ஆண்கள், பெண்கள், திருநங்கைகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டன. முதலில் 42 கி.மீ. தூரத்துக்கான ஓட்டத்தை அதிகாலை 4 மணிக்கு மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம் அருகே நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

73,206 பேர் பங்கேற்பு

அதைத்தொடர்ந்து காலை 5.30 மணிக்கு 21 கி.மீ., 10 கி.மீ., மற்றும் 5 கி.மீ. மாரத்தான் ஓட்டத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 42 கி.மீ. மாரத்தான் ஓட்டத்தில் 671 பேரும், 21 கி.மீ. மாரத்தான் ஓட்டத்தில் 1,991 பேரும், 10 கி.மீ. மாரத்தான் ஓட்டத்தில் 6 ஆயிரத்து 240 பேரும், 5 கி.மீ. மாரத்தான் ஓட்டத்தில் 64 ஆயிரத்து 714 பேரும் பங்கேற்றனர். இதில் 50 ஆயிரத்து 629 ஆண்களும், 21 ஆயிரத்து 514 பெண்களும், ஆயிரத்து 63 திருநங்கைகளும் என 73 ஆயிரத்து 206 பேர் பங்கேற்றனர்.

ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டவர்களை உற்சாகப்படுத்த 14 இடங்களில் தமிழ்நாட்டின் பண்பாடு, கலாசாரம், பாரம்பரிய இசைக்குழுக்கள் வீரர்களை உற்சாகப்படுத்தினர். ஓடு பாதையில் 17 இடங்களில் ஓட்டப்பந்தய வீரர்களுக்கு தண்ணீர், பழங்கள், ஊட்டச்சத்து பானங்கள், கடலை மிட்டாய் போன்றவை வழங்கப்பட்டன. மேலும், 20-க்கும் மேற்பட்ட ஆம்புலன்சுகள், 150-க்கும் மேற்பட்ட டாக்டர்களை கொண்ட மருத்துவ குழுவினர், மற்றும் போலீசார் ஓட்டப்பந்தய வீரர்களுக்கான பாதுகாப்பை வழங்கினர்.

முதல் பரிசு ரூ.1 லட்சம்

மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில், முதல் 2 பிரிவு ஓட்டப்பந்தயத்தில் முதல் 3 இடங்களை பிடித்த ஆண்கள், பெண்களுக்கு முறையே ரூ.1 லட்சம், ரூ.50 ஆயிரம், ரூ.25 ஆயிரம் பரிசு தொகை வழங்கப்பட்டது. இதே போன்று 3-வது பிரிவில் முதல் பரிசாக ரூ.50 ஆயிரம், 2-ம் பரிசாக 25 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.15 ஆயிரமும் வழங்கப்பட்டது. 4-வது பிரிவில் கலந்து கொண்டவர்களில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.25 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.15 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரமும் வழங்கப்பட்டது. மேலும், மாரத்தானில் கலந்து கொண்ட ஆயிரத்து 63 திருநங்கை, திருநம்பிகளுக்கு தலா ரூ.1,000 சிறப்பு பரிசாக வழங்கப்பட்டது.

மாரத்தானில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு தீவுத்திடலில் நடைபெற்ற விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார்.

ஓட்டப்பந்தய வீரர்கள் மாரத்தானில் கலந்து கொண்டதற்கு அடையாளமாக புகைப்படம் எடுத்துக்கொள்ள அமைக்கப்பட்டிருந்த 'செல்பி பாயிண்ட்'டில் வீரர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். போட்டியில் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் வெண்கல பதக்கம் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

கின்னஸ் உலக சாதனை

73 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த பிரமாண்ட மாரத்தான் போட்டி கின்னஸ் உலக சாதனை படைத்து உள்ளது.

இதற்கான சான்றிதழை கின்னஸ் உலக சாதனை புத்தக பிரதிநிதிகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்