ஆயக்குடியில் கொய்யா பழச்சாறு தயாரிக்கும் ஆலை அமைக்கப்படுமா?; விவசாயிகள் எதிர்பார்ப்பு

ஆயக்குடியில் கொய்யா பழச்சாறு தயாரிக்கும் ஆலை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Update: 2022-08-27 16:06 GMT

ஆயக்குடியில் கொய்யா பழச்சாறு தயாரிக்கும் ஆலை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

கொய்யா சாகுபடி

திண்டுக்கல் மாவட்டத்தில் மலை வாழைப்பழத்திற்கு சிறுமலை, விருப்பாட்சி ஆகிய பகுதிகள் பிரசித்திபெற்றது. அதேபோன்று கொய்யா பழத்திற்கு பழனியை அடுத்த ஆயக்குடி பெயர் பெற்றது. இங்கு விளையும் கொய்யா பழத்திற்கு வெளியூர்களில் தனி மவுசு உள்ளது.

ஆயக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கொய்யா சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு பறிக்கப்படும் கொய்யா, ஆயக்குடி சந்தையில் வைத்து விற்பனை செய்யப்படுகிறது. காலை 6 மணி முதல் 10 மணி வரை செயல்படும் சந்தையில் தினமும் சுமார் 20 டன் கொய்யா வரத்தாகிறது. சீசன் காலங்களில் வரத்து இதைவிட அதிகமாக இருக்கும். இதில் வெளியூர் வியாபாரிகள் கொய்யாவை நேரடியாக கொள்முதல் செய்கின்றனர். மேலும் உள்ளூர் வியாபாரிகளும் கொய்யாவை சில்லறைக்கு வாங்கி பழனி அடிவார பகுதியில் விற்கின்றனர்.

நிலையான விலை

புகழ்பெற்ற ஆயக்குடி கொய்யாவுக்கு சந்தையில் எப்போதும் விலை நிலையாக இருப்பதில்லை. சீசன் காலத்தில் சரிந்தும், இதர நாட்களில் அதிகமாகவும் இருக்கும். அதாவது சீசன் காலத்தில் 22 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி கொய்யா ரூ.400 முதல் ரூ.500 வரை விற்கப்படுகிறது.

வரத்து குறைவு காலத்தில் பெட்டி ரூ.800-ல் இருந்து ரூ.1000 வரை விலை போகிறது. சில நேரங்களில் சீசன் காலத்தில் வரத்து அதிகமாக இருக்கும்போது கொய்யா விலை சரிந்து கிலோ ரூ.10-க்கு விற்கப்படும். அப்போது கட்டுபடியான விலையின்றி குப்பையில் கொட்டும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுகின்றனர்.

பழச்சாறு ஆலை

எனவே ஆயக்குடி பகுதியில் கொய்யாவை பதப்படுத்தி வைக்க குளிர்பதன கிடங்கு மற்றும் கொய்யா பழச்சாறு தயாரிக்கும் ஆலை அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், சீசன் காலத்தில் சந்தைக்கு கொய்யா வரத்து அதிகமாகும் போது போதிய விலை கிடைப்பதில்லை. இதனால் கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல் உள்பட வெளியூர் வியாபாரிகள் இங்கு வந்து குறைந்த விலைக்கு கொய்யாவை வாங்கி செல்கின்றனர்.

பின்னர் அதிலிருந்து பழச்சாறு தயாரித்து மதிப்புக்கூட்டும் பொருளாக மாற்றி ஏற்றுமதி செய்கின்றனர். எனவே ஆயக்குடி கொய்யாவுக்கு புவிசார் குறியீடு வழங்குவதுடன், ஆயக்குடி பகுதியில் கொய்யா பழச்சாறு தயாரிக்கும் ஆலை அமைத்தால் விவசாயிகளுக்கு நிலையான விலை கிடைக்கும். எனவே ஆயக்குடி கொய்யா விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்