பழனி முருகன் கோவிலில் பக்தர்களை தடுத்த காவலாளிகள்; தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு

பழனி முருகன் கோவிலுக்கு செல்ல முயன்ற பக்தர்களை காவலாளிகள் தடுத்தனர். இதனால் அவர்களுக்கு இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2023-10-04 19:59 GMT

பழனி முருகன் கோவிலுக்கு செல்ல முயன்ற பக்தர்களை காவலாளிகள் தடுத்தனர். இதனால் அவர்களுக்கு இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பழனி முருகன் கோவில்

உலக பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவில் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடாகும். இங்குள்ள மூலவர் சிலை நவபாஷாணத்தால் ஆனது என்பதால் மிகவும் சிறப்பு பெற்றது. எனவே பழனி முருகப்பெருமானை தரிசிக்க தமிழகம் மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.

பழனி முருகன் கோவிலை பொறுத்தவரை தினமும் காலை 6 மணிக்கு நடை திறக்கப்படும். மாத கிருத்திகை மற்றும் திருவிழா காலங்களில் மட்டும் அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். பழனி கோவிலில் காலை 6.30 மணிக்கு விளாபூஜை, 8 மணிக்கு சிறு காலசந்தி, 9 மணிக்கு காலசந்தி, மதியம் 12 மணிக்கு உச்சிகாலம், மாலை 5.30 மணிக்கு சாயரட்சை, இரவு 8.30 மணிக்கு ராக்காலம் என தினமும் 6 கால பூஜைகள் நடைபெறுகிறது.

விசேஷ நாட்களில் ராக்கால பூஜை நேரம் மாறுபடும். எனவே பழனி கோவிலில் ராக்கால பூஜை தொடங்கியவுடன் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

தள்ளு, முள்ளு

இந்நிலையில் நேற்று முன்தினம் திருப்பூர் பகுதியை சேர்ந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய பழனிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு படிப்பாதை வழியாக செல்ல முயன்றனர். ஆனால் படிப்பாதையில் பாதுகாப்பில் இருந்த காவலாளிகள், 9 மணிக்கு பிறகு கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை என கூறியதாக தெரிகிறது. ஆனால் அவர்களையும் மீறி பக்தர்கள் உள்ளே செல்ல முயன்றனர்.

அப்போது காவலாளிகள், பக்தர்களை தடுத்தனர். இதனால் பக்தர்களுக்கும், காவலாளிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் அது தள்ளு, முள்ளாக மாறியது. அதையடுத்து அங்கிருந்த பக்தர்கள் வந்து இரு தரப்பினரையும் விலக்கிவிட்டனர். இதற்கிடையே பழனி கோவிலில் பக்தர்களுக்கும், காவலாளிகளுக்கும் இடையே நடந்த தள்ளு, முள்ளு சம்பவம் தொடர்பான வீடியோ பேஸ்புக், வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதுகுறித்து கோவில் அதிகாரிகள் கூறும்போது, சம்பவம் குறித்து காவலாளிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.

பணியிடை நீக்கம்

இதற்கிடையே பழனி முருகன் கோவிலில் பக்தர்களுடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதாக கோவில் காவலாளிகள் செல்வகணபதி, கருப்பையா, தங்கவேல், ராஜசேகர் ஆகியோரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து கோவில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்