கிளாம்பாக்கம் புறநகர் பஸ்நிலையம் எதிரே ஜி.எஸ்.டி. சாலையில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் தொடக்கம்

கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையம் எதிரே ஜி.எஸ்.டி. சாலையில் மழை நீர் கால்வாய் அமைக்கும் பணிகள் தொடங்கியது.

Update: 2023-09-10 09:55 GMT

பஸ்நிலையம்

சென்னை அடுத்த வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் ரூ.393 கோடியே 74 லட்சம் செலவில் மிகவும் பிரமாண்டமான முறையில் கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையம் கட்டி முடிக்கப்பட்டு விரைவில் திறக்கும் நிலையில் உள்ளது. இதற்கிடையே கிளாம்பாக்கம் பகுதியில் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தாலே கிளாம்பாக்கம் பஸ் நிலையம் எதிரே உள்ள சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவது தொடர் கதையாகிவிட்டது. மேலும் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. எனவே கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையம் எதிரே ஜி.எஸ்.டி. சாலையில் மழைநீர் தேங்காதப்படி எப்படி தடுப்பது என்பது குறித்து சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

இதனை தொடர்ந்து கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையத்தில் இருந்து வெளியேறும் மழை நீரை ஜி.எஸ்.டி. சாலை நடுவில் சிறு பாலம் அமைத்து மழைநீர் கால்வாய் விரிவுபடுத்தி கிளாம்பாக்கம் ஏரிக்கு கொண்டு செல்ல சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ரூ.13 கோடி செலவில் திட்டம் தயாரித்து தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையத்தின் அனுமதிக்கு அனுப்பியது. இது தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டு தற்போது தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் ரூ.1 கோடியே 58 லட்சம் டெபாசிட் தொகை கட்ட அறிவுறுத்தியுள்ளது.

மழைநீர் கால்வாய்

இந்த நிலையில் மழை காலம் தொடங்கும் முன்பு பணிகளை விரைவாக முடிக்க சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் திட்டமிட்டுள்ளது. இதனை தொடர்ந்து நேற்று முதல் கட்டமாக கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையத்தின் மேற்கு பகுதியில் உள்ள ஜி.எஸ்.டி. சாலை பகுதியில் 742 மீட்டருக்கு மழை நீர் கால்வாய் அமைக்கும் பணிகளை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். 3 மீட்டர் அகலம் 1½ மீட்டர் உயரத்தில் இந்த மழை நீர் கால்வாய் அமைக்கப்படுகிறது. அதே அளவில் அருகில் உள்ள மனுநீதி சோழன் தெருவிலும் கால்வாய் அமைக்கப்பட்டு கிளாம்பாக்கம் ஏரிக்கு மழை நீர் செல்லும் வழியில் கால்வாய் அமைக்கப்பட உள்ளது.

கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையம் ஜி.எஸ்.டி. சாலையின் குறுக்கே முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட ஒரு மீட்டர் அளவிலான கான்கிரீட் பாலங்களை கொண்டு 65 மீட்டருக்கு நவீன முறையில் சிறுபாலம் அமைக்கப்பட்டு கிழக்கு பகுதியில் உள்ள மழை நீர் இந்த புதியதாக அமைக்கும் சிறிய கால்வாய் வழியாக மேற்கு பகுதிக்கு கொண்டு சென்று அங்கிருந்து கிளாம்பாக்கம் ஏரிக்கு கொண்டு செல்லும் வகையில் திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்