மின் மயானத்திற்கு ஜி.எஸ்.டி வரி போட்ட அரசை எங்காவது பார்த்து இருக்கிறோமா - ஜோதிமணி எம்.பி குற்றச்சாட்டு

மின் மயானத்திற்கும், அரிசிக்கும், அவசர சிகிச்சைக்கும் ஜி.எஸ்.டி. வரி போட்ட அரசை எங்காவது பார்த்து இருக்கிறோமா என்று ஜோதிமணி எம்.பி தெரிவித்துள்ளார்.;

Update:2022-07-30 15:56 IST

வேடசந்தூர்,

மத்திய அரசின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா வேடசந்தூர் அருகே உள்ள பூத்தாம்பட்டி தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

இந்த விழாவில் கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி பங்கேற்று 357 மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர், மூன்று சக்கர சைக்கிள், காதொலி கருவி, ஊன்றுகோல் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது,

மக்களுடைய குறைகளை நாடாளுமன்றத்தில் பேசவேண்டும் என்பதற்காக என்னை பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்துள்ளீர்கள்.

அரிசி, பால், தயிர், கோதுமை உள்ளிட்ட பொருட்களுக்கு 5 சதவிதம் ஜி.எஸ்.டி. வரி போடப்பட்டதை கண்டித்தும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்டவைகள் விலைவாசி உயர்வை கண்டித்தும் பிளாக் கார்டு படித்து பேசியதற்காக நாடாளுமன்றத்தில் இருந்து 2 வாரம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளேன்.

இதற்காக டெல்லியில் நடந்த பேராட்டத்தின்போது போலீசார் தாக்கியதில் இரண்டு கைகள் பாதிக்கப்பட்டது. அதற்காக இன்று கூட மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தேன். என்னோடு சேர்ந்து காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மன்னிப்பு கேட்டால் இடைநீக்கம் ரத்து செய்யப்படும் என்கிறார்கள். நாங்கள் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும். மக்களை பாதிக்கின்ற ஜி.எஸ்.டி. வரி விதித்ததிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளோம். மக்களின் கோரிக்கையை பேசினோம் என்பதால் நாங்கள் மன்னிப்பு கேட்கமாட்டோம்.

மின் மயானத்திற்கும், அரிசிக்கும், அவசரசிகிச்சைக்கும் ஜி.எஸ்.டி. வரி போட்ட அரசை எங்காவது பார்த்து இருக்கிறோமா.

நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ஒரே முறைதான் வழங்கப்பட்டுள்ளது. எனக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் கல்விக்கு 55 சதவிதம், அரசு மருத்துவமனைக்கு 30 சதவிதம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து நிதி ஒதுக்கீடு செய்து பணியாற்றியுள்ளேன்.

முதல்-அமைச்சர் என்றால் உள்துறை, நிதித்துறை போன்ற துறைகளை வைத்திருப்பார். ஆனால் நமது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளின் நலனில் அக்கறை கொண்டு மாற்றித்திறனாளிகள் நலத்துறையும் வைத்துள்ளார்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்