நாளை நடக்கிறது குரூப்-2, 2ஏ முதல்நிலைத்தேர்வு: தேர்வர்கள் கட்டாயம் இதை மறக்காதீங்க

8 லட்சம் பேர் எழுதக்கூடிய குரூப்-2, 2ஏ முதல்நிலைத்தேர்வு நாளை நடக்கிறது

Update: 2024-09-12 19:15 GMT

கோப்புப்படம்

சென்னை,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி), அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை குரூப்-1, குரூப்-2, குரூப்-4 உள்பட பல்வேறு போட்டித்தேர்வுகள் வாயிலாக நிரப்பி வருகிறது. அந்த வகையில், 2024-ம் ஆண்டில், உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், வனவர் உள்பட பல்வேறு குரூப்-2 பதவிகளில் 507 காலிப்பணியிடங்களும், உதவியாளர், கணக்கர், நேர்முக உதவியாளர் உள்பட பல்வேறு குரூப்-2ஏ பதவிகளில் ஆயிரத்து 820 காலிப்பணியிடங்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 327 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கான போட்டித்தேர்வு அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி கடந்த மாதம் (ஜூன்) 20-ம் தேதி வௌியிட்டது.

இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் வாயிலாக 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர். இவர்களுக்கான முதல்நிலைத் தேர்வு நாளை (சனிக்கிழமை) தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 2 ஆயிரத்து 763 தேர்வு மையங்களில் நடக்க இருக்கிறது.

தேர்வர்கள் கவனத்திற்கு...

விண்ணப்பதாரர்கள் தேர்வு நடைபெறும் நாளன்று அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்துக்கு ஹால்டிக்கெட்டில் குறிப்பிட்டபடி காலை 9 மணிக்கு முன்னதாக வந்துவிட வேண்டும். 9 மணிக்கு மேல் வரும் விண்ணப்பதாரர்கள் யாராக இருந்தாலும், எக்காரணம் கொண்டும் தேர்வு மையத்தில் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும், தேர்வு அறைக்கு செல்லும்போது கட்டாயம் ஹால்டிக்கெட்டை எடுத்துச்செல்ல வேண்டும் எனவும் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஜான் லூயிஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும் விண்ணப்பதாரர்கள் ஹால்டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அறிவுரைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும், தடை செய்யப்பட்ட மின்னணு சாதனங்கள் மற்றும் வேறு வகையான சாதனங்களை எடுத்துச்செல்ல அனுமதியில்லை என்றும், தேர்வின் அனைத்து நடவடிக்கைகளும் வீடியோ பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றும் டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்