புதிய வகுப்பறை கட்டிட அடிக்கல் நாட்டு விழா

அயன்சிங்கம்பட்டியில் புதிய வகுப்பறை கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

Update: 2023-07-22 21:22 GMT

அம்பை:

அம்பை யூனியன் அயன்சிங்கம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் 2-ம் வகுப்பு மாணவி இஷா, பள்ளியில் போதிய வகுப்பறை இல்லாததால் மிகவும் கஷ்டப்படுகிறோம் என தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் வாயிலாக தெரிவித்து இருந்தாள். இதையடுத்து முதல்-அமைச்சரின் உத்தரவுக்கிணங்க அப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி ரூ.30 லட்சம் மதிப்பில் புதிய வகுப்பறை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு யூனியன் தலைவர் பரணி சேகர் தலைமை தாங்கினார். யூனியன் ஆணையாளர்கள் முருகன், பொன்னுலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அயன்சிங்கம்பட்டி பஞ்சாயத்து தலைவர் முத்துகிருஷ்ணன் வரவேற்றார். நிகழ்ச்சியில் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ஆ.பிரபாகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மாணவி இஷாவை வைத்து அடிக்கல் நாட்டினார். பஞ்சாயத்து துணைத் தலைவர் சுடலை அரசன், யூனியன் என்ஜினீயர் நாதன், தி.மு.க. விவசாய அணியை சேர்ந்த கிட்டு, ஒன்றிய இளைஞரணி முருகையா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விக்கிரமசிங்கபுரம் அருகே சிவந்திபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட அகஸ்தியர்பட்டி மெயின் தெருவில் ரூ.42 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணி மற்றும் ரூ.1.15 கோடி மதிப்பீட்டில் சிவந்திபுரம் தைப்பூசத்துறை ரோடு தொடக்க பணி, அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் ஆறுமுகம்பட்டியில் 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு பஞ்சாயத்து தலைவர் ஜெகன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன் கலந்துகொண்டு சாலைப்பணிகளை தொடங்கி வைத்தும், ஆறுமுகம்பட்டி புதிய ரேஷன் கடையை திறந்தும் வைத்தார். விழாவில் அம்பை யூனியன் தலைவர் பரணிசேகர், துணை தலைவர் ஞானக்கனி ஸ்டான்லி, ஒன்றிய கவுன்சிலர் சரஸ்வதி தங்கராஜ், மாவட்ட கவுன்சிலர் அருண் தபசு பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்