மளிகை கடைக்காரர் கொலை வழக்கு: அ.தி.மு.க. மகளிரணி மாவட்ட செயலாளர் கணவருடன் கைது
மளிகை கடைக்காரர் கொலை வழக்கில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேகேப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் திம்மராஜ் (வயது 40). இவர் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். திம்மராஜிக்கு புஷ்பா என்ற மனைவியும், தீக் ஷிதா என்ற 5-ம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி அவர் தனது கடை அருகில் உள்ள டீக்கடையில் டீ அருந்திக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்தவாறு வந்த 3 பேர், திம்மராஜை கத்தியால் சரமாரியாக குத்தியும், இரும்புக் கம்பியால் தாக்கியும் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக ஓசூர் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதனிடையே ஓசூரை சேர்ந்த கிரண், ராஜ்குமார், மூர்த்தி ஆகிய 3 பேர் நேற்று முன்தினம் ராமநாதபுரம் கோர்ட்டில் சரண் அடைந்தனர். கொலைக்கு உடந்தையாக இருந்ததாக ஓசூர் அருகே நல்லூரை சேர்ந்த ராகேஷ் (19), பேகே பள்ளியை சேர்ந்த ஸ்ரீதர் (27), அவருடைய மனைவி சுவேதா (25) மற்றும் கொலையாளிகளுக்கு ஆயுதங்கள் வினியோகம் செய்த பேரிகையை சேர்ந்த முரளி (24) ஆகிய 4 பேரையும் ஓசூர் சிப்காட் போலீசார் நேற்று முன்தினம் மாலை கைது செய்தனர்.
இவர்களில் ராகேஷ், ஸ்ரீதர், முரளி ஆகியோரை தர்மபுரி கிளை சிறையிலும், சுவேதாவை சேலம் பெண்கள் சிறையிலும் அடைத்தனர். இதைத்தொடர்ந்து, திம்மராஜ் கொலையில் தொடர்பு இருப்பதாக கூறி, பேகேப்பள்ளியை சேர்ந்த கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. மகளிரணி செயலாளர் நாகரத்தினா (44), அவருடைய கணவர் முனிராஜ் (51) மற்றும் 17 வயதுடைய சிறுவர்கள் 3 பேர் என மொத்தம் 5 பேரை ஓசூர் சிப்காட் போலீசார் நேற்று கைது செய்தனர்.
இந்த வழக்கில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 3 பேர் ராமநாதபுரம் கோர்ட்டில் சரணடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.