மாவட்டத்தில் அனைத்து காட்டுப்பகுதிகளிலும் வன உரிமை சட்டத்தை அமல்படுத்த வேண்டும்; பர்கூர் மலைவாழ் மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு

ஈரோடு மாவட்டத்தில் அனைத்து வனப்பகுதிகளிலும் வன உரிமை சட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும் என்று பர்கூர் மலைவாழ் மக்கள் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

Update: 2023-05-15 20:37 GMT

ஈரோடு மாவட்டத்தில் அனைத்து வனப்பகுதிகளிலும் வன உரிமை சட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும் என்று பர்கூர் மலைவாழ் மக்கள் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

வனவிலங்கு சரணாலயம்

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.

தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க தலைவர் வி.பி.குணசேகரன் தலைமையில் பர்கூர் மலையில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஒரு கோரிக்கை மனு வழங்கப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஈரோடு வனக்கோட்டத்தில் அந்தியூர், பர்கூர், தட்டக்கரை, சென்னம்பட்டி ஆகிய 4 வனச்சரகங்களை உள்ளடக்கிய 80 ஆயிரத்து 567 ஹெக்டேர் வனப்பரப்பில் தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நேரத்தில், அமைய உள்ள சரணாலயத்துக்குள் வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் (1972), பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் -வனம் சார்ந்த பிறமக்கள் (வன உரிமைகளை அங்கீகரித்தல்) சட்டம் (வன உரிமை சட்டம் 2006) -க்கு இணங்கி உரிமைகளை அமல்படுத்துதல் குறித்து கவனத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.

சட்டம்

அதாவது வன உரிமைச்சட்டம் என்பது வன உரிமைகளுடன் வனம் மற்றும் வன விலங்குகள் குறித்தான பகுதிகளையும், விதிகளையும் கொண்டு உள்ளது. வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972-க்கு பின்னர் வன உரிமைச்சட்டம் 2006 நிறைவேற்றப்பட்டதால், இந்த சட்டமே நிலைபெறும் தன்மையை பெறுகிறது. எனவே இந்த விதிகளை மீறுவது அபராதத்துடன் கூடிய குற்றமாக இருக்கிறது.

இந்த சட்டத்தின் படி வன உரிமையை கொண்டு இருக்கும் கிராம சபை அளவிலான அமைப்புகள் வன உயிரினங்கள், காடுகள் மற்றும் உயிரி பன்மத்தை (பல்லுயிர்) பாதுகாக்கும் அதிகாரத்தை பெற்றவர்களாவர். இந்தநிலையில் தந்தை பெரியார் வனவிலங்குகள் சரணாலயம் அமைக்கப்படுவது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் கிராம சபைகளுக்கு தெரிவிக்கப்படவில்லை.

அமல்படுத்த வேண்டும்

எனவே வனவிலங்கு சரணாலயம் அமைக்கும் முன்பு ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து வனப்பகுதிகளிலும் வன உரிமை சட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும். கிராம சபையால் வரையறுக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட சமூக வன வள பகுதி மாவட்ட அளவிலான குழுவால் உடனடியாக அங்கீகரிக்கப்பட்டு கிராமசபைக்கு உரிமை வழங்கப்பட வேண்டும்.

சமூக வன வள காடுகள் வனத்துறையின் ஆவணங்களில் அவ்வாறு முறையாக தனி வகையாக பதிவு செய்யப்பட வேண்டும். இதுதொடர்பாக குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். இந்த பணிகள் முற்றுபெற்ற பிறகு தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம் அறிவிப்பிலும் சமூக வன வள வகையை வரைபடமாகவும் முறையாக இணைக்க வேண்டும்.

தற்காலிகமாக...

வன விலங்குகள் பாதுகாப்பு சட்டம் 1972, திருத்தம் செய்யப்பட்ட சட்டம் 2006 என 2 சட்டங்களின் வழிமுறைகள் எதுவும் கடைபிடிக்கப்படாமல் உரிமைகளை அமல்படுத்தாமலும் ஈரோடு மாவட்ட காட்டுப்பகுதிகளை வன விலங்கு சரணாலயமாக அறிவிக்கும் நடவடிக்கையை தமிழக அரசு தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

சாய கழிவுகள் நீர்நிலைகளில்...

ஜனநாயக மக்கள் கழகத்தினர் கொடுத்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் சாய, சலவை, தோல் ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளில் இருந்து வெளியேறும் ரசாயன கழிவுகள் சுண்ணாம்பு ஓடை, பிச்சைக்காரன்பள்ளம் ஓடை, பெரும்பள்ளம் ஓடைகளின் வழியாக காவிரி ஆற்றில் சென்று நேரடியாக கலக்கிறது. மேலும், பெருமாள்மலை, பி.பி.அக்ரஹாரம், ஆர்.என்.புதூர், வைராபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் சாய, சலவை பட்டறைகளில் இருந்து கழிவுகள் நேரடியாக நீர்நிலைகளிலும், நிலத்திலும் திறந்துவிடப்படுகிறது.

இதனால் அந்தபகுதிகளில் உள்ள மக்களுக்கு புற்றுநோய், தோல் சம்பந்தப்பட்ட நோய், சுவாச கோளாறு உள்ளிட்ட பாதிப்பு ஏற்படுகிறது. எனவே மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஆலைகள் செயல்பட அனுமதிக்கக்கூடாது. சாய கழிவுகள் நீர்நிலைகளில் கலப்பதை தடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்