போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்ய வேண்டும் - அதிகாரிகளுக்கு அமைச்சர் சிவசங்கர் உத்தரவு

போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் குறைகளை அவ்வப்போது கேட்டறிந்து நிவர்த்தி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் சிவசங்கர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2023-06-17 06:29 GMT

சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நேற்று தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்து, போக்குவரத்துத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி, போக்குவரத்துத் துறை சிறப்புச் செயலாளர் வெங்கடேஷ், அனைத்துப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள், தனி அலுவலர் மற்றும் உயர் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

மகளிர் கட்டணமில்லா பயண திட்டத்தின்படி, 297.71 கோடி மகளிர் பயணங்கள் மேற்கொண்டதை ஆராய்ந்து, இத்திட்டத்தை செம்மைப்படுத்தும் விதமாக புதிய பஸ்களை அறிமுகப்படுத்துதல் தொடர்பாகவும் அதிகாரிகளுடன் அவர் ஆலோசித்தார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது:-

பொதுமக்கள் பெரிதும் சார்ந்துள்ள பஸ் போக்குவரத்தை நிறைவாக அளிக்க புதிய பஸ்களை விரைவில் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப, புதிய பஸ்களின் ஒப்பந்தப் புள்ளிகள் குறித்தும், பழைய பஸ்களை புதுப்பிப்பது குறித்தும் ஆய்வு செய்து, அதை விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

தற்போது தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மாணவ, மாணவிகளுக்காக இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கை குறித்து கேட்டறிந்து, தேவைக்கு ஏற்ப கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும். பள்ளிகள் தொடங்குவதற்கு முன் பஸ்கள் பள்ளியை சென்றடையும் வகையில் இயக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும். போக்குவரத்துக் கழகங்களில், பணியின் போது இறந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையிலான வேலை வாய்ப்பை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பணியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் ஓய்வு, விருப்ப ஓய்வு பெற்றவர்களின் பணப் பலன்களை அவர்கள் ஓய்வு பெரும்போதே வழங்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இறந்துபோன பணியாளர்களின் பணப்பலனை அவர்களின் குடும்பத்தினருக்கு உடனே வழங்க வேண்டும்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பணியாளர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில், விளையாட்டுகளை மீண்டும் அறிமுகப்படுத்தி அவர்களை அதில் ஈடுபடுத்த வேண்டும். போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் குறைகளை அவ்வப்போது கேட்டறிந்து அதை நிவர்த்தி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

போக்குவரத்துக் கழகங்களில் பஸ்களின் இயக்க வருவாய் மற்றும் செலவுகள், இதர வருவாய் மூலம் நிதியை பெருக்குதல், செலவுகளை குறைத்தல் மற்றும் தற்போது செயல்பட்டு வரும் திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆய்வு செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்