நாட்டுப்படகுகளுக்கும் 60 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்த வேண்டும்
நாட்டுப்படகுகளுக்கும் 60 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்த வேண்டும் என்று ராமநாதபுரத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் மீனவர்கள் வலியுறுத்தினர்.
நாட்டுப்படகுகளுக்கும் 60 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்த வேண்டும் என்று ராமநாதபுரத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் மீனவர்கள் வலியுறுத்தினர்.
குறைதீர்க்கும் கூட்டம்
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மீனவர்கள் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் நடைபெற்றது. மீன்வளத்துறை துணை இயக்குனர் காத்தவராயன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலந்து கொண்ட மீனவர்கள் மற்றும் மீனவர் சங்க பிரதிநிதிகள் பேசியதாவது:- தேவதாஸ்:- கச்சத்தீவினை இந்தியா இலங்கைக்கு தாரை வார்க்கும் போது மீன்பிடி உரிமையும், வலைகள் உலர்த்தும் உரிமையும் பெறப்பட்டது. ஆனால் அந்த உரிமை மீறப்பட்டு மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்ய முடியாத நிலை உள்ளதால் உரிமையை மீண்டும் பெற்றுத்தர வேண்டும். மீன்பிடித்தடை காலம் முடிந்து கடலுக்கு செல்ல உள்ள நிலையில் கார்ப்பரேட் நிறுவனங்கள் சிண்டிகேட் அமைத்து இறால் மீன்களுக்கு உரிய விலை கிடைக்காமல் செய்து வருகின்றனர். மீனவர்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் அறிக்கையில் அரசு மீனவர்களுக்கு மானிய விலை டீசல் அளவினை உயர்த்தி வழங்குவதாக அறிவித்தது. ஆனால் இன்னும் உயர்த்தி வழங்கவில்லை. குறைந்தது 2 ஆயிரம் லிட்டர் மானிய டீசல் வழங்க வேண்டும்.
போஸ்: மீனவர்கள் அளிக்கும் மனுக்களுக்கு பதில் தபால் மட்டுமே அதிகாரிகள் வழங்குகின்றனர். நடவடிக்கை இல்லை. விதிமுறைகளை மீறிய விசைப்படகுகளை ஒழுங்குபடுத்த வேண்டும். எமரிட்: 60 நாட்கள் மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாட்டு படகுகள் தடை செய்யப்பட்ட என்ஜின்களை பயன்படுத்தி கடல் வளம் முழுவதையும் அள்ளி சென்று வருகின்றனர். விசை படகுகளை மட்டும் அதிகாரிகள் ஆய்வு செய்யும் நிலையில் நாட்டுப் படகுகளையும் ஆய்வு செய்ய வேண்டும். அதிக திறன் கொண்ட நாட்டு படகுகளை பறிமுதல் செய்ய வேண்டும். என்ஜின் பொருத்திய நாட்டுப்படகுகளுக்கும் 60 நாட்கள் தடைக்காலம் அமல்படுத்த வேண்டும்.
கருணாமூர்த்தி: மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல உள்ளனர். இந்நிலையில் அரசின் சட்ட ஒழுங்கு விதிமுறைகளை மீறி மீன்பிடி அனுமதி சீட்டு பெறாமல் முன்கூட்டியே விசைப்படகுகள் கடலுக்கு சென்று வருவது ஆண்டாண்டு காலமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை ஒழுங்குப்படுத்தி இந்த ஆண்டு தடைக்காலம் முடிந்ததும் விதிமுறைப்படி விசைப்படகுகள் கடலுக்கு செல்வதை முறைப்படுத்த வேண்டும்.
கூட்டத்தில் சாயல்குடியை சேர்ந்த லட்சுமி ரோஜா தனது கணவர் சரவணபிரபாகரன் மீன்பிடி தொழிலுக்கு சென்றபோது மர்மமான முறையில் இறந்த நிலையில் அவர் இறப்புக்கான காரணம் தெரியவில்லை. அரசு உடனடியாக தனக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். கூட்டத்தில் மீனவர்களும், மீனவர் சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.