பெருமுகை ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்: மழைநீர் சேகரிப்பை மக்கள் இயக்கமாக முன்னெடுக்க வேண்டும்- கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி பேச்சு

பெருமுகை ஊராட்சியில் நேற்று நடந்த சிறப்பு கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி மழைநீர் சேகரிப்பை மக்கள் இயக்கமாக முன்னெடுக்க வேண்டும் என்று கூறினார்.

Update: 2023-05-01 21:46 GMT

டி.என்.பாளையம்

பெருமுகை ஊராட்சியில் நேற்று நடந்த சிறப்பு கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி மழைநீர் சேகரிப்பை மக்கள் இயக்கமாக முன்னெடுக்க வேண்டும் என்று கூறினார்.

கிராம சபை கூட்டம்

நாடு முழுவதும் குடியரசு தினம், சுதந்திர தினம், மே தினம் மற்றும் காந்தி ஜெயந்தி என 4 நாட்களில் கிராம சபை கூட்டங்கள் கூட்டப்படுகின்றன. அதன்படி நேற்று மே தினத்தையொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 225 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டது.

டி.என்.பாளையம் ஒன்றியத்துக்குட்பட்ட பெருமுகை ஊராட்சி துசு நகரில் மே தின சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் பிரகாஷ் முன்னிலை வகித்தார்.

மழைநீர் சேகரிப்பு

கூட்டத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பேசும்போது கூறியதாவது:-

ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பை முனைப்புடன் செயல்படுத்த அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். மழை நீர் சேகரிப்பு மக்கள் இயக்கமாக முன்னெடுத்து செல்ல வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்க அதிக அளவில் மரக்கன்றுகள் நட வேண்டும்.

ஊரக பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க ஏடிஸ் கொசு உற்பத்தியை தடுக்கும் வகையில் குக்கிராம அளவில் ஒட்டு மொத்த துப்புரவு பணி நடந்து வருகிறது. கிராமப்பகுதிகளில் சுத்தமான குடிநீர் வினியோகத்தை உறுதி செய்வது கட்டாயமாகும்.

கல்வி இடைநிற்றல்

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகளுக்கான ஒப்புதல் பெறப்பட வேண்டும். பிளாஸ்டிக், பாலித்தீன் தடை செய்யப்படுவது, பாலித்தீன் பொருட்கள் பயன்படுத்தும் கடைகளுக்கு அபராதம் விதிப்பது கடைபிடிக்கப்பட வேண்டும். பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். நிறைவான சுகாதார திட்டத்துக்கான அறிக்கை தயாரிக்கப்பட வேண்டும். ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.

மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடங்களுக்கு செல்லாமல் கல்வி இடைநிற்றலை தவிர்க்க போதுமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு பல்வேறு திட்டங்கள் குறித்தும் கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி கூறினார்.

நம்ம ஊரு சூப்பரு

கூட்டத்தில் பொதுமக்கள் வழங்கிய மனுக்களை கலெக்டர் பெற்றுக்கொண்டார். மகளிர் திட்டம் சார்பில் 2 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதியாக தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. முன்னதாக "நம்ம ஊரு சூப்பரு" என்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

கூட்டத்தில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் வெங்கடேசன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் சூர்யா, வேளாண்மை உதவி இயக்குனர் சரவணன், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கார்த்திக்குமார், வேளாண்-பொறியியல் துறை செயற்பொறியாளர் விஸ்வநாதன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சாந்தாமணி, டி.என்.பாளையம் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சாந்தி, ராதாமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்