வேலைவாய்ப்புக்கு பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் வேலைவாய்ப்புக்கு பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கள்ளக்குறிச்சி கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

Update: 2023-04-19 18:45 GMT

கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் மத்திய, மாநில அரசுகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களால் அறிவிக்கப்படும் போட்டி தேர்வுகளுக்கு அனுபவமிக்க சிறப்பு வல்லுனர்களை கொண்டு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ஸ்டாப் செலக் ஷன் கமிஷன் ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு தர தேர்வு மூலமாக உதவி பிரிவு அலுவலர், உதவி கணக்கு அலுவலர், வருமானவரி ஆய்வாளர், உதவி ஆய்வாளர் (சி.பி.ஐ.) மத்திய அரசில் பல்வேறு துறைக்கான உதவியாளர் போன்ற 7500 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கான கல்வித்தகுதி பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கு வருகிற 3-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இத்தேர்விற்கு https://ssc.nic.in என்ற இணையதளத்தில் உள்ள விளம்பர அறிவிப்பை பார்த்து விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 1.8.2023 அன்று 18 வயது முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி. அல்லது எஸ்.டி.பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் உச்சபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு. இந்த காலிப்பணியிடங்களுக்கு கணினி வழி எழுத்து தேர்வாக நடைபெறும். பெண்கள் எஸ்.சி. மற்றும் எஸ்.டி.பிரிவினர் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பிக்க கட்டணம் இல்லை. மேலும் வருகிற 25-ந் தேதி ஸ்டாப் செலக் ஷன் கமிஷன் ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு தர தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிகள், படிக்க வேண்டிய பாடங்கள், இவ்வலுவலக தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் இலவச பயிற்சி வகுப்புகள், பாடக்குறிப்புகள் போன்றவை குறித்த வழிகாட்டல் நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. எனவே கள்ளகுறிச்சி மாவட்டத்தை சேர்ந்த தகுதியுடைய பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் இத்தேர்விற்கு இணைய வழியாக விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்