நீர்வளத்துறை என்ஜினீயர்கள் 214 பேருக்கு ஜி.பி.எஸ். கருவி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

ஏரி, அணைகள் அமைப்பதற்காக நில அளவை பணிகளை துல்லியமாக மேற்கொள்ள நீர்வளத்துறை என்ஜினீயர்கள் 214 பேருக்கு ஜி.பி.எஸ். கருவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

Update: 2023-08-08 20:43 GMT

சென்னை,

2021-2022-ம் ஆண்டு நீர்வளத்துறை மானிய கோரிக்கையின் போது நீர்வளத்துறையின் 9 கோட்டங்களுக்கு 9 டிஜிட்டல் ஜி.பி.எஸ். கருவிகளையும், இதில் பணியாற்றும் என்ஜினீயர்களுக்கு 214 மடிக்கணினிகள், 214 கையடக்க ஜி.பி.எஸ். கருவிகள் மற்றும் 250 பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, இந்த உபகரணங்களை கொள்முதல் செய்ய மொத்தம் ரூ.9½ கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதியில் ரூ.5.11 கோடி செலவில் எல்காட் மூலம் 9 டிஜிட்டல் ஜி.பி.எஸ். கருவிகள் மற்றும் 214 கையடக்க ஜி.பி.எஸ். கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டது.

துல்லியமான நில அளவை

இந்த நவீன கருவிகள் செயற்கைகோள் தொடர்புடன் இயக்கப்படுகிறது. இந்த கருவிகள் செயற்கைகோள்களில் இருந்து சமிக்ஞைகளை பெற்று அதன்மூலம் இருப்பிடத்தை துல்லியமாக அளப்பதால், நீர்ப்பாசன திட்டங்களான தடுப்பணைகள், ஏரிகள், நீர்தேக்கங்கள், கால்வாய்கள் போன்றவற்றை அமைத்திட நில அளவை பணிகளை புவியியல் தகவல் அமைப்புடன் இணைந்து துல்லியமாக மேற்கொள்ளவும்,

வரைபடங்கள் மற்றும் மதிப்பீடுகள் தயாரிக்கும் பணிகளை நீர்வளத்துறையின் திட்ட உருவாக்க பிரிவு என்ஜினீயர்கள் துரிதமாக மேற்கொள்ளவும், அதன்மூலம் திட்டங்களின் பலன்கள் மக்களிடம் உரிய காலத்தில் சென்றடையவும் இந்த கருவிகள் பெரிதும் உதவுகின்றன.

முதல்-அமைச்சர் வழங்கினார்

அத்துடன் நீர்வள ஆதாரங்களை தொடர்ந்து கண்காணிப்பதில் இந்த கருவிகள் குறிப்பிட்ட பங்கு வகிக்கிறது. எல்காட் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட இந்த ஜி.பி.எஸ். கருவிகளை நீர்வளத்துறை என்ஜினீயர்களுக்கு வழங்கிடும் அடையாளமாக 5 பேருக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்