எலக்ட்ரீசியனுக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
விபத்தில் படுகாயமடைந்த எலக்ட்ரீசியனுக்கு இழப்பீட்டு தொகை வழங்காததால் பெரம்பலூரில் அரசு விரைவு பஸ் கோர்ட்டு ஊழியர்களால் ஜப்தி செய்யப்பட்டது. அப்போது பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பஸ் மீது மோதி விபத்து
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, வேப்பூரை சோ்ந்தவர் ராமசுப்பு. இவரது மகன் சீதாராமன் (வயது 25). எலக்ட்ரீசியன். இவர் கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் 10-ந்தேதி அதிகாலை மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக அரசு விரைவு பஸ் ஒன்றில் பயணம் செய்தார். அப்போது திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கொள்ளிடம் பழுர் காலனி பிரிவு சாலை அருகே வந்த போது டிரைவர் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி வந்ததால் பஸ் சாலையின் மைய தடுப்புச்சுவரில் மோதி கட்டுபாட்டை இழந்து எதிரே வந்த பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த சீதாராமன் திருச்சி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, பின்னர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்றார். அப்போது சீதாராமனின் வலது கால் பாதம் பாதியாக அகற்றப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இழப்பீடு
இந்த சம்பவம் தொடர்பாக சீதாராமன் ரூ.15 லட்சம் இழப்பீடு கேட்டு பெரம்பலூர் மாவட்ட முதன்மை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், ரூ.9 லட்சத்து 46 ஆயிரத்து 221 இழப்பீடாக சீதாராமனுக்கு வழங்க சென்னை தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்துக்கு கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 22-ந்தேதி கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சீதாராமனுக்கு இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை.
இதனால் தற்போது வட்டியுடன் இழப்பீடாக மொத்தம் ரூ.15 லட்சத்து 35 ஆயிரத்து 978 சீதாராமனுக்கு வழங்கப்படாததால் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்துக்கு வந்து செல்லும் சென்னை தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் ஏதேனும் பஸ் ஒன்றை ஜப்தி செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார் அதன்படி நேற்று காலை திருச்சியில் இருந்து சென்னை நோக்கி பயணிகளுடன் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்துக்கு வந்து நான்கு ரோடு வழியாக சென்ற அரசு விரைவு மிதவை பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.
பயணிகள் சாலை மறியல்
ஜப்தி செய்யப்பட்ட பஸ்சுக்கு பதிலாக மாற்று பஸ் வர தாமதம் ஆனதால் அந்த பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் ஜப்தி செய்யப்பட்ட பஸ்சின் டிரைவர், கண்டக்டர் மறியலில் ஈடுபட்ட பயணிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் பயணிகள் மறியலை கைவிட்டனர். அதனை தொடர்ந்து போக்குவரத்து ஒழுங்குப்படுத்தப்பட்டது. பின்னர் பயணிகள் மாற்று பஸ் வந்தவுடன் அதில் ஏறி சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.