இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், செங்கலக்குடியை சேர்ந்தவர் சரவணன் (வயது 42). இவர் கடந்த 2021 ஏப்ரல் 19-ந் தேதி செங்கலகுடியிலிருந்து திருச்சி நோக்கி பால் வினியோகம் செய்வதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது மணப்பட்டியில் இருந்து திருச்சி நோக்கி வந்த அரசு டவுன் பஸ் சரவணன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரவணன் உயிரிழந்தார். இதுகுறித்து உயிரிழந்த சரவணனின் மனைவி ராதிகா புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த முதன்மை நீதிபதி, உயிரிழந்த சரவணன் குடும்பத்தினருக்கு ரூ.27 லட்சத்து 68 ஆயிரத்து 841 இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். ஆனால் இதுவரை சரவணன் குடும்பத்திற்கு அரசு போக்குவரத்துக் கழகம் இழப்பீடு வழங்காததால் சம்பந்தப்பட்ட அரசு பஸ்சை ஜப்தி செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து நீதிமன்ற ஊழியர்கள் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் அரசு பஸ்சை ஜப்தி செய்து கோர்ட்டுக்கு கொண்டு சென்றனர்.