வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயார் - துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி

சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து இடங்களிலும் நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன என்று துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

Update: 2024-10-13 07:23 GMT

சென்னை,

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது. மழை தொடர்பான முன்னெச்சரிக்கை பணிகளை செய்ய மண்டல வாரியாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து இடங்களிலும் நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன.

சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் 150 பேர் பணிபுரிந்து வருகின்றனர். மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்படும் மக்கள் 1913 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். TN Alert என்ற மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்து அதன் மூலம் வானிலை தொடர்பான அனைத்து தகவல்களையும் அறியலாம்.

சென்னையில் மழை நீர் வடிகால் பணிகள் நிறைவுறாமல் இருந்தால் அதை சுற்றி வேலி அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கினால் உடனே அகற்ற மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளன. மழை நீர் பாதிக்கப்படும் பகுதிகளில் தன்னார்வலர்கள் மூலம் உதவி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மின்சாரம் தொடர்பான பணிகளை மேற்கொள்ள வெளி மாவட்ட ஆட்கள் பயன்படுத்தப்பட உள்ளனர். மழை நேரத்தில் அனைவரும் கரம் கோர்த்து செயல்பட்டு மக்களை காக்கும் பணியில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்