இழப்பீட்டு தொகை முழுமையாக வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
இழப்பீட்டு தொகை முழுமையாக வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
கோவை
கோவையில் விபத்தில் வாலிபர் பலியானதில் முழுமையான இழப்பீடு தரப்படாததால் அரசு பஸ் 2-வது முறையாக ஜப்தி செய்யப்பட்டது.
விபத்து
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளியை சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மகன் சதீஷ் (வயது 24). இவர் கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஏசி மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். மேலும் ஜமீன்ஊத்துக்குளியில் இருந்து தினமும் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு உக்கடம் சிக்னல் அருகே மோட்டார் சைக்கிளில் சதீஷ் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் வந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த சதீஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து கோவை மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இழப்பீடு தொகை கோரி வழக்கு
இதனிடையே சதீஷ் குடும்பத்தினர் கோவை மாவட்ட 3-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இழப்பீடு தொகை கோரி வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கடந்த 2019-ம் ஆண்டு சதீஷ் குடும்பத்தினருக்கு ரூ.12 லட்சம் விபத்து இழப்பீட்டுத் தொகை வழங்க உத்தரவிட்டார். ஆனால் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் விபத்துக்கான உரிய இழப்பீட்டு தொகை வழங்காததால் வட்டியுடன் சேர்த்து ரூ.16 லட்சம் வழங்க கோரி மீண்டும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதிஷ் குடும்பத்திற்கு ரூ.16 லட்சம் இழப்பீடு தொகை வழங்க உத்தரவிட்டார். இருப்பினும் இழப்பீட்டுத் தொகை வழங்காததால் கோர்ட்டு உத்தரவுப்படி கடந்த ஜனவரி மாதம் கோவை கோட்ட அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டது. இதையடுத்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் முதற்கட்டமாக ரூ.7 லட்சத்து 49 ஆயிரம் இழப்பீடு தொகை வழங்கினர். மீதமுள்ள தொகையை ஒரு மாதத்திற்குள் வழங்குவதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் அந்த தொகையை ஒரு மாதம் ஆகியும் வழங்காத காரணத்தினால் கோர்ட்டு உத்தரவுப்படி அதே அரசு பஸ் நேற்று 2-வது முறையாக மீண்டும் ஜப்தி செய்யப்பட்டு, கோர்ட்டு வளாகத்தில் நிறுத்தப்பட்டது.