கொடைக்கானல் சுற்றுப்பயணம் நிறைவு; கவர்னர் ஆர்.என்.ரவி சென்னை சென்றார்
கொடைக்கானல் சுற்றுப்பயணம் நிறைவடைந்த நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.;
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக 3 நாள் சுற்றுப்பயணமாக கடந்த 14-ந்தேதி சென்னையில் இருந்து கொடைக்கானலுக்கு வருகை தந்தார். நேற்று முன்தினம் அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கவர்னர், மாணவிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். அதேபோல் கொடைக்கானலில் உள்ள பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட சுற்றுலா இடங்களையும் பார்வையிட்டார். பின்னர் அன்றைய தினம் இரவு கொடைக்கானல் கோஹினூர் விருந்தினர் மாளிகையில் தங்கினார்.
இந்தநிலையில் நேற்று காலை 10 மணிக்கு கொடைக்கானலில் இருந்து சென்னை செல்வதற்காக காரில் புறப்பட்டார். நண்பகல் 12.15 மணிக்கு கொடைரோட்டில் உள்ள பயணியர் விடுதிக்கு அவர் வந்தார். அங்கு அவருக்கு திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன், போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் மற்றும் அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். பயணியர் விடுதியில் சிறிது நேரம் ஓய்வெடுத்த கவர்னர், 12.40 மணிக்கு காரில் மதுரைக்கு புறப்பட்டு சென்றார். அங்கிருந்து விமானம் மூலம் அவர் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.