செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி திடீர் ஆய்வு

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி திடீர் ஆய்வு மேற்கொண்டார். எளியவழி தமிழ் கற்றல் அணுகுமுறைகளை உருவாக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.;

Update:2022-09-15 04:47 IST

சென்னை,

கவர்னர் ஆர்.என்.ரவி சென்னையில் உள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அந்நிறுவனத்தின் தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்களுடன் அவர் கலந்துரையாடினார்.

நிறுவன இயக்குனர் பேராசிரியர் சந்திரசேகரன், கவர்னர் ஆர்.என்.ரவிக்கு செம்மொழி தமிழாய்வு நிறுவனம் மேற்கொண்டுவரும் பல்வேறு செயல்பாடுகளையும், எதிர்கால திட்டங்களையும் குறித்து ஒரு காணொலி மூலம் விளக்கினார்.

பின்னர் கவர்னர் அங்கு அமைக்கப்பட்டுள்ள பல்வேறு ஆய்வு வசதிகளை பார்வையிட்டார். கவர்னர் ஆர்.என்.ரவி தனது உரையில், இந்தியாவின் அடையாளத்தை உருவாக்குவதில் தமிழின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அடிக்கோடிட்டுக் காட்டினார். மேலும் தமிழ் மொழியின் வளம் இந்திய சமூக நாகரிக வளர்ச்சியின் பிரதிபலிப்பாக இருக்கிறது என்றும் புகழாரம் சூட்டினார்.

பாராட்டு

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பெருமுயற்சிகளை கவர்னர் பாராட்டினார். இந்தியாவின் மறுமலர்ச்சிக்கு தமிழ் இலக்கியத்தில் உள்ள அறிவு, தமிழ்க் கலாசார ஞானம் போன்றவற்றை இந்தியர் அனைவரும் கற்கும் வகையில் வழிவகை செய்வதன் வாயிலாக தமிழகத்துக்கு அப்பால் கொண்டுசெல்ல முற்பட வேண்டும் என்றார்.

இந்தியாவில் உள்ள சில மாநிலங்கள் தங்கள் பள்ளிகளில் தமிழ் மொழியை மூன்றாம் மொழியாக அறிமுகப்படுத்த ஆர்வமாக உள்ளதாகவும் கவர்னர் கூறினார். தமிழ் மொழிபெயர்ப்பாளர்களும், ஆய்வாளர்களும், தமிழ் அல்லாத மாணவர்களை கவரும் வகையில், எளியவழி தமிழ் கற்றல் அணுகுமுறைகளை உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கற்றல் அணுகுமுறை ஆக்கப்பூர்வமாகவும், எளிதாகவும், தமிழ் அல்லாதவர்களை கவரும்வகையில் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

செம்மொழி நிறுவன வளாகத்தில் உள்ள பூங்காவில் மரக்கன்றை கவர்னர் ஆர்.என்.ரவி நட்டுவைத்தார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்