தனியார் தேயிலை எஸ்டேட்டுக்கு கவர்னர் ஆர்.என். ரவி குடும்பத்துடன் பயணம்
நீலகிரியில் உள்ள தனியார் தேயிலை எஸ்டேட்டுக்கு கவர்னர் ஆர்.என். ரவி குடும்பத்துடன் நேற்று சென்று வந்தார்.
ஊட்டி
நீலகிரியில் உள்ள தனியார் தேயிலை எஸ்டேட்டுக்கு கவர்னர் ஆர்.என். ரவி குடும்பத்துடன் நேற்று சென்று வந்தார்.
கவர்னர் வருகை
தமிழக கவர்னர் ஆர்.என். ரவி கடந்த ஆண்டு ஜூன் மாதம் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வந்தார். அப்போது பழங்குடியினர் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதைத்தொடர்ந்து மீண்டும் 6 நாள் சுற்று பயணமாக கடந்த 5-ந் தேதி மீண்டும் சென்னையில் இருந்து கோவைக்கு விமான மூலமும் அங்கிருந்து கார் மூலம் ஊட்டிக்கும் வருகை புரிந்தார். அவரை கலெக்டர் அம்ரித் புத்தகம் கொடுத்து வரவேற்றார். மேலும் நேற்று முன்தினம் மகளிர் தினத்தன்று, நீலகிரி மாவட்ட பெண் வக்கீல்கள் சங்கத்தினர் கவர்னரை சந்தித்தனர். அப்போது கவர்னர் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
கடந்த 3 நாட்களாக வெளியில் எங்கும் செல்லாமல் ராஜ்பவன் மாளிகையிலேயே ஓய்வு எடுத்து வந்தார்.
தனியார் எஸ்டேட்டுக்கு பயணம்
இந்தநிலையில் நேற்று காலை 11 மணியளவில் கவர்னர் ஆர்.என்.ரவி தனது குடும்பத்தினருடன், ஊட்டி அருகே 20 கி.மீ. தொலைவில் சாம்ராஜ் பகுதியில் உள்ள தனியார் தேயிலை தொழிற்சாலையுடன் கூடிய எஸ்டேட்டுக்கு சென்றார்.
சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக தனியார் தொழிற்சாலை மற்றும் எஸ்டேட் வளாகத்தை சுற்றி பார்த்த கவர்னர், மாலை 4 மணியளவில் மீண்டும் ஊட்டிக்கு திரும்பினார். இதைத் தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) கேரள மாநிலம் வயநாடு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக கவர்னர் எஸ்டேட் பயணத்தை ஒட்டி சாலையின் இருபுறமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் ஊட்டியில் சற்று போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.