ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை திருப்பி அனுப்பினார் கவர்னர்

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை கவர்னர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் அதிகாரம் தமிழக சட்டசபைக்கு இல்லை என்று கவர்னர் விளக்கம் அளித்து உள்ளார்.;

Update:2023-03-09 04:30 IST

சென்னை,

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் கடந்த சில ஆண்டுகளாக மக்கள் மத்தியில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

இதற்கு அடிமையான பலர், பணத்தை இழந்து மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துள்ளனர்.

தடுக்க முயற்சி

இதனால் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடுப்பதற்காக கடந்த ஆட்சியில் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

சட்டம் கொண்டு வருவதற்கு சரியான தரவுகள் கூறப்படவில்லை என்று கூறி அந்த சட்டத்தை கோர்ட்டு ரத்து செய்தது. மேலும், இதுபோன்ற சட்டங்கள் வலுவான சட்டமாக இயற்றப்பட வேண்டும் என்றும் கோர்ட்டு அறிவுறுத்தியது.

அவசரச் சட்டம்

இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 10.6.2022 அன்று சட்டசபையில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் தொடர்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதன்படி, இணையவழி சூதாட்டத்தை தடுக்க புதிய சட்டம் இயற்றுவது தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு அறிவுரை வழங்குவதற்காக, சென்னை ஐகோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் அரசு ஒரு குழுவை அமைத்தது. இக்குழு 27.6.2022 அன்று தனது அறிக்கையை முதல்-அமைச்சரிடம் சமர்ப்பித்தது. அந்த அறிக்கை அதே நாளில் நடந்த அமைச்சரவையின் பார்வைக்காக வைக்கப்பட்டது.

அதன்பின், பள்ளி மாணவர்கள் மீது இணையவழி விளையாட்டுகள் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை பற்றி பள்ளிக்கல்வித்துறை மூலமாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு, பொது மக்களிடம் மின்னஞ்சல் மூலம் பெறப்பட்ட கருத்துகள் மற்றும் கருத்து பகிர்வோர்களிடம் நடத்தப்பட்ட கலந்தாலோசனை கூட்டம் ஆகியவற்றின் மூலம் பெறப்பட்ட கருத்துகள் ஆகியவற்றின் அடிப்படையில், சட்டத்துறையின் ஆலோசனையுடன் ஒரு வரைவு அவசரச் சட்டம் தயாரிக்கப்பட்டு 29.8.2022 அன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டது.

கவர்னர் ஒப்புதல்

அந்த கூட்டத்தில் அவசரச் சட்டம் மேலும் மெருகூட்டப்பட்டு செம்மைப்படுத்தப்பட்டு, மீண்டும் முழு வடிவில் அமைச்சரவைக்கு வைக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி அவசரச் சட்டம் தயாரிக்கப்பட்டு பின்னர் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் வைக்கப்பட்டு அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டது. இந்த அவசரச் சட்டத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலை பெறுவதற்காக அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அது அனுப்பிவைக்கப்பட்ட அன்றைய தினமே கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். அதைத் தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு எதிரான அவசரச் சட்டம் வெளியிடப்பட்டது.

அந்த அவசரச் சட்டத்தை நிரந்தர சட்டமாக நிறைவேற்றும் வகையில், கடந்த ஆண்டு அக்டோபர் 19-ந் தேதி தமிழக சட்டசபையில், ஆன்லைன் ரம்மி தடை மற்றும் இணையதள விளையாட்டுகள் முறைப்படுத்தும் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது. அந்த மசோதா, அனைத்து கட்சிகளின் ஆதரவோடு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் அந்த மசோதா கவர்னர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்காக கடந்த ஆண்டு அக்டோபர் 28-ந் தேதி அனுப்பிவைக்கப்பட்டது.

நேரில் விளக்கம்

ஆனால் அவசரச் சட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் அளித்த கவர்னர், அதற்கான சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதில் கால தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்த காலகட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத்தினால் தற்கொலைகளும் நிகழ்ந்த வண்ணம் இருந்தன. இதனால் சட்ட மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்கும்படி கவர்னருக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்து வந்தன.

இந்நிலையில், அந்த மசோதா தொடர்பாக தமிழக அரசிடம் சில கேள்விகளை கவர்னர் எழுப்பினார். அதற்கு விளக்கம் அளிக்கும்படி அரசை கவர்னர் கேட்டுக்கொண்டார். கவர்னரிடம் இருந்து அந்த கடிதம் வந்த 24 மணி நேரத்தில் கடந்த நவம்பர் 25-ந் தேதி தமிழக அரசு விளக்கம் அளித்தது. மேலும், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அதற்கான விளக்கத்தை கவர்னர் மாளிகைக்கு சென்று நேரில் அளித்தார்.

அந்த சட்டத்தின் மீதான சில சந்தேகங்களுக்கு தெளிவு பெற்றபின்பு ஒப்புதல் தருவதாக கவர்னர் தெரிவித்ததாக அமைச்சர் ரகுபதி கூறினார். ஆனாலும் அந்த மசோதாவுக்கு ஒப்புதல் கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் அவசரச் சட்டம் கடந்த நவம்பர் 27-ந் தேதியுடன் காலாவதி ஆனது. எனவே ஆன்லைன் சூதாட்டத்தில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கு ஒரே ஆதாரமாக அந்த சட்ட மசோதா மட்டுமே இருந்தது.

திருப்பி அனுப்பினார்

ஆனாலும் அந்த மசோதாவுக்கு உடனடியாக கவர்னரின் ஒப்புதல் கிடைக்கவில்லை. ஆன்லைன் சூதாட்டத்தினால் மட்டும் இதுவரை 44 பேர் தற்கொலை செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை மற்றும் இணையதள விளையாட்டுகள் முறைப்படுத்தும் சட்ட மசோதாவை தமிழக அரசுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று திருப்பி அனுப்பிவைத்தார். சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு 139 நாட்கள் கழித்து அந்த மசோதா திருப்பி அனுப்பப்பட்டது, அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

சட்டசபைக்கு அதிகாரம் இல்லை

மசோதாவை திருப்பி அனுப்பியது தொடர்பாக கவர்னர் ஆா்.என்.ரவி விளக்கம் அளித்து உள்ளார். அதில், ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடைவிதிக்கும் சட்டம் கொண்டுவர தமிழக சட்டசபைக்கு அதிகாரம் இல்லை என்று குறிப்பிட்டு உள்ளார். சட்டத்தை இயற்ற தமிழக அரசுக்கு முகாந்திரம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளதாக தெரிகிறது.

ஏற்கனவே கேள்வி எழுப்பிய கவர்னர்

இதற்கு முன்பு ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் மசோதா தொடர்பாக 8 கேள்விகளை கவர்னர் ஆர்.என்.ரவி எழுப்பியிருந்தார். அதற்கான விளக்கத்தை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேரில் சென்று கொடுத்திருந்தார். ஆனால், தற்போது அந்த விளக்கத்தை ஏற்காமல் கவர்னர் அதை திருப்பி அனுப்பியுள்ளார்.

இதுபோன்ற சட்டத்தை மாநில அரசு கொண்டு வர முடியுமா? என்று ஏற்கனவே அவர் கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்துக்கே அதுபோன்ற சட்டங்களை இயற்ற அதிகாரம் உள்ளதாகவும், மாநில அரசுக்கு அதில் அதிகாரம் இல்லை என்றும் கவர்னர் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் இன்று நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் இந்த சூழ்நிலையின் அடுத்த கட்டம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று அமைச்சர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே நீட் தேர்வு தொடர்பான மசோதாவும் இதுபோல திருப்பி அனுப்பப்பட்டு கவர்னர் விளக்கம் கோரியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்