சேலத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா: தி.மு.க. ஆட்சியில் 70 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்

20 மாத தி.மு.க. ஆட்சியில் 70 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று சேலத்தில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2023-01-27 22:23 GMT

நலத்திட்ட உதவிகள்

சேலம் மாவட்டம் மாசிநாயக்கன்பட்டியில் நோட்டர் டேம் ஆப் ஹோலி கிராஸ் பள்ளி மைதானத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் கார்மேகம் வரவேற்றார். அமைச்சர் கே.என்.நேரு, எம்.பி.க்கள் எஸ்.ஆர்.பார்த்திபன், பொன்.கவுதமசிகாமணி, மேயர் ராமச்சந்திரன், எம்.எல்.ஏ.க்கள் வக்கீல் ராஜேந்திரன், அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற பணிகளை பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் பல்வேறு துறைகள் மூலம் 26 ஆயிரத்து 649 பேருக்கு ரூ.221 கோடியே 42 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

70 சதவீதம் வாக்குறுதிகள்

தி.மு.க. ஆட்சிக்கு வந்த 20 மாதங்களில் 70 சதவீதம் தேர்தல் வாக்குறுதிகளை முதல்-அமைச்சர் நிறைவேற்றி உள்ளார். அவர் முதல்-அமைச்சராக பதவி ஏற்றவுடன் பெண்கள் பஸ்சில் இலவசமாக பயணம் செய்வதற்கான கோப்பில் முதல் கையெழுத்திட்டார். இதன்மூலம் பெண்களுக்கான செலவு குறைந்துள்ளது. 2021-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் கொரோனா தாக்கம் அதிகமாக இருந்தது. முதல்-அமைச்சரின் சிறப்பான நடவடிக்கையால் மக்களையும், மாநிலத்தையும் காப்பாற்றினார்.

கொரோனா காலத்தில் பல்வேறு நோய்களால் வீடுகளில் முடங்கி கிடந்த மக்களை காப்பாற்றுவதற்காக மக்களை தேடி மருத்துவம் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தில் இதுவரை ரூ.1 கோடி பேருக்கு வீடுகள் தேடி மருந்து, மாத்திரைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதேபோல் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. கல்லூரி மாணவிகள் மட்டும் அல்லாமல் பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. படிக்கும் மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுவதால் வீடுகளில் முடங்கிய மாணவிகளை மீண்டும் படிப்பை தொடர வழிவகை செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் 8,017 மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

விளையாட்டு மைதானம்

முதல்- அமைச்சரின் காலை உணவு திட்டத்தால் தமிழகம் முழுவதும் 1.16 லட்சம் குழந்தைகள் பயன் பெற்று வருகிறார்கள். சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் 54 பள்ளிகளில் 5 ஆயிரத்து 447 மாணவ, மாணவிகள் பயன் பெற்று வருகிறார்கள். நடப்பு ஆண்டு முதல் இத்திட்டத்தை அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்தப்படும். அதேபோல், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தில் சேலம் மாவட்டத்தில் மட்டும் 6,815 விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர். இதேபோல் பல்வேறு திட்டங்களால் பொதுமக்கள் பயன் பெற்று வருகிறார்கள்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் சேலம் மாவட்டத்தில் பல்வேறு திட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. சேலம் அரியாகவுண்டம்பட்டியில் ரூ.25 கோடியில் வெள்ளி தொழிலுக்கான பன்மாடி உற்பத்தி மையம், ஜாகீர்அம்மாபாளையத்தில் 119 ஏக்கரில் ஜவுளி பூங்கா, கருப்பூரில் டைடல் பார்க், அம்மாப்பேட்டையில் ரூ.120 கோடியில் ரெயில்வே மேம்பாலம், ரூ.158 கோடியில் மாநகராட்சி பகுதியில் கூடுதல் குடிநீர் திட்டம், போடிநாயக்கன்பட்டி, மூக்கனேரி உள்பட 3 ஏரிகளை சீரமைக்கும் திட்டம், ரூ.20 கோடியில் பல்நோக்கு விளையாட்டு மைதானம் உள்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

திராவிட மாடல் ஆட்சி

முதல்-அமைச்சரின் செயல்பாட்டால் இந்தியாவில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்குகிறது. இதை பொறுக்காத எதிர்க்கட்சிகள் அவதூறு பரப்புகின்றனர். மக்கள் பணியே முதல் பணி என்ற வகையில் தான் முதல்-அமைச்சர் செயல்பட்டு வருகிறார். தமிழகத்தில் சிறப்பான முறையில் ஆட்சி நடந்து வருவதால் எதிர்க்கட்சிகளால் எந்த குற்றச்சாட்டும் கூற முடியவில்லை. இதனால் அவர்களுக்குள்ளேயே அடித்துக்கொள்கிறார்கள். எனவே, அவதூறுகளை கண்டுகொள்ள தேவையில்லை. பாசிசம், அடிமைத்தனம் இல்லாமல் முற்போக்கு, சுயமரியாதை உடன் செயல்பட்டு வருவது தான் திராவிடமாடல் அரசு. எனவே, போலிகளை கண்டு ஏமாறாமல் மக்கள் அனைவரும் இந்த அரசுக்கு துணை நிற்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

விழாவில், மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் டி.எம்.செல்வகணபதி (மேற்கு), எஸ்.ஆர்.சிவலிங்கம் (கிழக்கு), துணை மேயர் சாரதாதேவி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விளையாட்டு போட்டிகள்

தொடர்ந்து விழா நடந்த பள்ளி மைதானத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அம்மாப்பேட்டை காலனி பகுதியில் ரூ.20 கோடியில் பல்நோக்கு விளையாட்டு அரங்கம் அமைய உள்ள இடத்தை பார்வையிட்டார்.

இதையடுத்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி பேசினார். முன்னதாக காலையில் வீரபாண்டி ஊராட்சி ஒன்றியம் சென்னகிரி ஊராட்சியில் ஊரக விளையாட்டு மையத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் செய்திகள்