வெளிநாட்டு கல்வி சுற்றுப்பயணத்திற்கு செல்லும் அரசு பள்ளி மாணவர்கள்

போட்டிகளில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்கள் வெளிநாட்டு கல்வி சுற்றுப்பயணத்திற்கு செல்கிறார்கள்.

Update: 2023-04-25 18:45 GMT

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மன்ற போட்டிகளான இலக்கிய மன்றம், சிறார் திரைப்படம், வினாடி-வினா, வானவில் மன்றம், கலைத்திருவிழா மற்றும் விளையாட்டு விழா போன்றவை அரியலூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் 2022-23-ம் கல்வியாண்டில் பள்ளி அளவில் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து வட்டார அளவில் மற்றும் மாவட்ட அளவில் நடத்தப்பட்டு போட்டிகளில் வெற்றி பெற்று, முதலிடம் பெற்ற மாணவ- மாணவிகள் அனைவரும் மாநில அளவிலான சிறப்பு போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெற்றனர். அதன்படி அரியலூர் மாவட்டத்தில் செங்குந்தபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி 8-ம் வகுப்பு மாணவர் பிரணவ் கார்த்திக் வினாடி-வினா போட்டியிலும், செந்துறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி 9-ம் வகுப்பு மாணவி தீக்ஷிதா பேச்சுப்போட்டி (இலக்கிய மன்ற போட்டியிலும்), புதுச்சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 8-ம் வகுப்பு மாணவர் நிதிஷ்குமார் வானவில் மன்றம் போட்டியிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்று சாதனை புரிந்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக மேற்கண்ட போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற்ற மேற்கண்ட 3 மாணவ-மாணவிகளும் மற்றும் ஏலாக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி தமிழ் பட்டதாரி ஆசிரியர் சிவக்குமார் என்ற ஆசிரியரும் வெளிநாட்டு கல்வி சுற்றுப்பயணத்திற்கு பள்ளி கல்வித்துறையால் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எனவே, வெளிநாட்டு கல்வி சுற்றுப்பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்ட பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் ஆசிரியரை அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி கலெக்டர் அலுவலகத்துக்கு நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, ஆசிரியர்கள் உடனிருந்தனர். மேலும் இவர்கள் வெளிநாட்டு கல்வி சுற்றுப்பயணமாக பின்லாந்து, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கு கல்வி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்