தூத்துக்குடியில் அரசு விரைவு போக்குவரத்து கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில் அரசு விரைவு போக்குவரத்து கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடியில், காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்த அரசு விரைவு போக்குவரத்து கழக ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி- எட்டயபுரம் ரோட்டில் உள்ள அரசு விரைவு போக்குவரத்துக் கழக டெப்போ முன்பு சி.ஐ.டி.யு தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் விரைவு போக்குவரத்து கழக கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கிளைத் தலைவர் தர்மராஜ் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் ஆர்.ரசல் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
கோரிக்கை
ஆர்ப்பாட்டத்தில், சென்னை பெருநகர போக்குவரத்து கழகத்தில் 234 ஓட்டுநர், நடத்துநர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க வெளியிட்ட டெண்டரை ரத்து செய்ய வேண்டும். காலிப்பணியிடங்களை 100 சதவீதம் நிரப்ப வேண்டும். ஆயுள் காலம் முடிந்த பஸ்களை ஒதுக்கிவிட்டு புதிய பஸ்களை வாங்கி கொடுக்க வேண்டும். இதனால் பாதிக்கப்படும் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு மாற்று வேலை வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும். 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு மாவட்ட பொருளாளர் அப்பாத்துரை, நிர்வாகி ரவிதாகூர், போக்குவரத்து மத்திய சங்க மாநில துணை செயலாளர் பிச்சைமணி, கிளை செயலாளர் மாயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.