தமிழ்நாட்டில் மது அருந்த அரசு ஊக்குவிப்பு -ஐகோர்ட்டு கருத்து

மாநில அரசுகள் மதுவிலக்கு சட்டம் கொண்டு வர வேண்டும் என்று அரசியல் சாசனச் சட்ட கொள்கையில் கூறும், தமிழ்நாட்டில் அரசே மதுபானம் அருந்துவதை ஊக்குவிக்கும் வகையில் செயல்படுகிறதே என்று சென்னை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.

Update: 2023-07-26 22:58 GMT

சென்னை,

டாஸ்மாக் மதுபான கடை அருகில் தின்பண்டங்களை விற்பனை செய்வது மற்றும் காலி பாட்டில்களை சேகரிப்பதற்கான பார்களை நடத்துவதற்கான உரிமங்களுக்கான டெண்டருக்கு விண்ணப்பங்களை வரவேற்று டாஸ்மாக் நிர்வாகம் கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு 2-ந்தேதி அறிவிப்பாணை வெளியிட்டது.

அதில், தற்போது பார் உள்ள இடத்தை டெண்டரில் வெற்றி பெற்றவருக்கு, ஏற்கனவே பார் நடத்தும் உரிமத்தை பெற்றவர்கள் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதனால் இந்த அறிவிப்பாணையை ரத்து செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில், ஏற்கனவே பார் நடத்தும் பார் உரிமையாளர்கள் வழக்கு தொடர்ந்தனர்.

அறிவிப்பாணை ரத்து

அந்த மனுக்களில், 'பார் உள்ள கட்டிடத்தின் உரிமையாளர்களுக்கும் எங்களுக்கும்தான் வாடகை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அந்த கட்டிடத்துக்கும் டாஸ்மாக் நிர்வாகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அப்படி இருக்கும்போது, டெண்டரில் வெற்றிப் பெற்றவர்களுக்கு, நாங்கள் வாடகைக்கு எடுத்துள்ள கடையை கொடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது'' என்று கூறியிருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், டாஸ்மாக் பார் டெண்டர் குறித்த அறிவிப்பாணைகளை ரத்து செய்து கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் 30-ந்தேதி உத்தரவிட்டார்.

மதுவிலக்கு

இந்த உத்தரவை எதிர்த்து டாஸ்மாக் நிர்வாகம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபுர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், "எல்லா மாநில அரசுகளும் மதுவிலக்கு சட்டம் கொண்டு வர வேண்டும் என்று அரசியல் சாசனச் சட்ட கொள்கையில் கூறும்போது, தமிழ்நாட்டில் அரசே மதுபானம் அருந்துவதை ஊக்குவிக்கும் வகையில் செயல்படுகிறதே?'' என்று கருத்து தெரிவித்தனர்.

பின்னர், இந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை தொடர்ந்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்