திட்டங்களை செயல்படுத்துவதில் அரசு அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்-மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சிவசண்முகராஜா அறிவுறுத்தல்

மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் அனைத்துத் துறை அரசு அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சிவசண்முகராஜா கூறினார்.

Update: 2022-08-22 22:25 GMT

வளர்ச்சித்திட்ட பணிகள்

சேலம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப்பணிகள் குறித்து அனைத்து துறை அரசு அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கார்மேகம் முன்னிலை வகித்தார். மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சிவசண்முகராஜா தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் மாவட்ட வளர்ச்சிக்கு பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் அரசின் திட்டங்கள் சேலம் மாவட்டத்தில் முழுமையாக செயல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்து துறை அரசு அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது.

வேளாண் வளர்ச்சித்திட்டம்

குறிப்பாக, வேளாண்மை, உழவர் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் கருணாநிதியின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம் குறித்தும், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டது. அதே போன்று புதிய நீர்நிலைகளை உருவாக்குதல் மற்றும் புனரமைக்கும் அமிர்த குளம் திட்டம் குறித்தும், கருணாநிதியின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம், மழைக்காலத்திற்கு முன் மழைநீர் வடிகால்களை தூர்வாரும் திட்டம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் பட்டா வழங்குவதற்காக நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள், இ-சேவை மையங்களின் செயல்பாடுகள், ரெயில்வே மற்றும் விமான நிலைய விரிவாக்கம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு பணிகளுக்கான நிலம் கையகப்படுத்துதும் பணிகள் குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டது. எனவே அரசு நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் அனைத்து துறை அரசு அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், கூடுதல் கலெக்டர் பாலச்சந்தர், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, உதவி கலெக்டர் வீர் பிரதாப் சிங் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்