அரசு ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி அரசு ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊட்டி,
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி அரசு ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அடையாள வேலைநிறுத்தம்
புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெற்று, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி, ஊராட்சி செயலர், வருவாய் கிராம உதவியாளர், ஊர்ப்புற நூலகர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் நேற்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கலெக்டர் அலுவலகம் முன்பு வேலைநிறுத்த போராட்டம் நடந்தது. இதற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் பரமேஷ்வரி கலந்துகொண்டு பேசினார்.
அகவிலைப்படி உயர்வு
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வை போன்று மாநில அரசு ஊழியர்களுக்கும் தமிழக அரசு வழங்க வேண்டும். சரண் விடுப்பு ஒப்புவிப்பு மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு துறைகளை தனியார் மயமாக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும். அரசு துறைகளில் காலியாக உள்ள 6 லட்சம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றனர்.
இதில் பொது நூலக அலுவலர் சங்க மாவட்ட தலைவர் செந்தில்குமார், மாவட்ட செயலாளர் ஆனந்தன், வேளாண்மைத்துறை அமைச்சு பணியாளர் சங்க பொதுச்செயலாளர் முத்துகுமார், மாவட்ட பொருளாளர் அய்யனார், நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் சங்க நிர்வாகி ராஜேந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.