குமரி மாவட்ட சுற்றுலாத்தலங்களை இணைக்கும் விதமாக அரசு பஸ்கள் இயக்க வேண்டும் மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் தீர்மானம்

குமரி மாவட்ட சுற்றுலாத்தலங்களை இணைக்கும் விதமாக அரசு பஸ்களை இயக்க வேண்டும் என்று மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2022-09-02 18:14 GMT

நாகர்கோவில்:

குமரி மாவட்ட சுற்றுலாத்தலங்களை இணைக்கும் விதமாக அரசு பஸ்களை இயக்க வேண்டும் என்று மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாவட்ட பஞ்சாயத்து கூட்டம்

குமரி மாவட்ட பஞ்சாயத்து சாதாரண கூட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வருவாய் கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்ட் தாஸ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து செயலாளர் முருகானந்தம், துணைத்தலைவர் சிவகுமார் மற்றும் கவுன்சிலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டை, சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில், நாகர்கோவில் புனித சவேரியார் ஆலயம், நாகராஜா கோவில், காளிகேசம், பெருஞ்சாணி அணை, பேச்சிப்பாறை அணை, திற்பரப்பு அருவி, சிதறால் மலைக்கோவில், மாத்தூர் தொட்டிப்பாலம், பத்மநாபபுரம் அரண்மனை, புலியூர்குறிச்சி உதயகிரி கோட்டை, குளச்சல் கடற்கரை, முட்டம் கடற்கரை, லெமூரியா கடற்கரை, சங்குத்துறை கடற்கரை, சொத்தவிளை கடற்கரை, மணக்குடி பாலம், கோவளம் வழியாக கன்னியாகுமரி செல்லும் வகையில் சுற்றுலாத்துறையும், அரசு போக்குவரத்துக்கழகமும் இணைந்து பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

என்ட் டூ என்ட் பஸ்கள்

அங்கன்வாடி மையங்கள் மற்றும் ரேஷன் கடைகளில் காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை தேசிய நெடுஞ்சாலையை செப்பனிட வேண்டும், மருந்துவாழ் மலையில் மத்திய சித்தா ஆராய்ச்சி கவுன்சில் மூலம் விரிவாக்க அலுவலகம் அமைக்க வேண்டும். மார்த்தாண்டம் முதல் திருநெல்வேலி வரை என்ட் டூ என்ட் பஸ்களை காலை மற்றும் மாலை நேரங்களில் இயக்க வேண்டும்.

கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து நாகர்கோவில் ரெயில் நிலையத்துக்கு செல்லும் சாலையை இருவழிப்பாதையாக மாற்றம் செய்து இரண்டு பக்கங்களிலும் நடைபாதை அமைக்க வேண்டும். குமரி மாவட்ட விடுதலை வரலாறு, மாநில சீரமைப்பு ஆணையத்தின் அறிக்கை மற்றும் நாடாளுமன்ற விவாதம் குறித்த விவரம் தமிழக அரசு பாடப்புத்தகத்தில் சேர்க்க வேண்டும். கேரள மாநிலத்தில் இருந்து கழிவுகளை குமரி மாவட்ட பகுதிகளில் கொட்டுவதை முற்றிலும் தடை செய்ய வேண்டும். கிள்ளியூர் தாலுகா பகுதிகளில் மழை அளவை கணக்கிட மழைமானி அமைக்க வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கலந்து கொள்ளாத அதிகாரிக்கு கண்டனம் தெரிவித்தும், வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த திட்ட அறிக்கை மற்றும் மதிப்பீடு தாக்கல் செய்யாத அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்