அரசு பஸ்-கார் மோதல்; வாலிபர் பரிதாப சாவு

நெல்லையில் ரெயில்வே மேம்பாலத்தில் அரசு பஸ், கார் மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-05-31 19:59 GMT

நெல்லையில் ரெயில்வே மேம்பாலத்தில் அரசு பஸ், கார் மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

பஸ்-கார் மோதல்

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் இருந்து கோவில்பட்டிக்கு நேற்று அதிகாலை அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. வண்ணார்பேட்டையை கடந்து தச்சநல்லூர் வடக்கு பைபாஸ் சாலையில் ரெயில்வே மேம்பாலம் பகுதியில் பஸ் சென்றபோது எதிரே ஒரு கார் வந்தது. அப்போது, திடீரென்று பஸ்-கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் கவிழ்ந்து அப்பளம்போல் நொறுங்கியது.

பரிதாப சாவு

இந்த விபத்தில் காரை ஓட்டி வந்தவர் இடிபாட்டில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக அக்கம்பக்கத்தினர் உடனடியாக பாளையங்கோட்டை தீயணைப்பு துறையினர் மற்றும் தச்சநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்பு துறையினர் அங்கு வந்து காரில் சிக்கி இறந்தவர் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். போலீசாரும் அங்கு வந்து இறந்தவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து தீயணைப்பு துறையினர் பொக்லைன் எந்திரம் மூலமாக விபத்தில் சிக்கிய காரையும், வாலிபர் உடலையும் சுமார் 1 மணி நேரம் போராடி மீட்டனர்.

ஜாமீனில் வந்தவர்

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், விபத்தில் பலியானவர் தச்சநல்லூர் சிதம்பரம்நகர் பகுதியை சேர்ந்த நீர்காத்தலிங்கம் (வயது 39) என்பது தெரியவந்தது. இவர் கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார்.

இவர் கடந்த பிப்ரவரி மாதம் மதுபோதையில் காரை ஓட்டி சென்று மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். அந்த வழக்கில் அவர் ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை நீதிபதி விசாரித்து, நீர்காத்தலிங்கத்தை நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை இரவு 12 மணிக்கு மேல் 1 மாதம் சுத்தம் செய்ய வேண்டும் என்று நூதன தண்டனை விதித்து ஜாமீன் வழங்கினார். ஜாமீனில் வந்த அவர் நள்ளிரவு நேரத்தில் டாஸ்மாக் கடையை சுத்தம் செய்தது குறிப்பிடத்தக்கது.

போக்குவரத்து பாதிப்பு

இந்த நிலையில் நேற்று அதிகாலை நீர்காத்தலிங்கம் வண்ணார்பேட்டை செல்வதற்காக காரில் சென்றபோது, விபத்தில் சிக்கி உயிரிழந்தது ெதரியவந்தது. இதையடுத்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மீஹா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்