மருத்துவக் கழிவுகள் கொட்டுவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை: தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு பரிந்துரை

உயிரி மருத்துவக்கழிவு மேலாண்மை விதிகளை மீறி கேரளாவில் இருந்து 75 கிலோ மீட்டர் தூரம் தமிழகத்துக்குள் வந்து மருத்துவக்கழிவுகளை கொட்டி உள்ளனர்.;

Update:2023-11-19 05:45 IST

மதுரை,

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

ஆலங்குளம் அருகே குருவன்கோட்டை கிராமத்தில் கடந்த மே மாதம் கேரளாவில் இருந்து மருத்துவக்கழிவுகளை கொட்டுவதற்காக வந்த லாரியை கிராமத்தினர் சிறைபிடித்தனர். இதுசம்பந்தகமாக வந்த புகாரின் அடிப்படையில் நாங்கள் அந்த வாகனத்தை பறிமுதல் செய்தோம். உரியவர்கள் மீது வழக்குபதிவு செய்தோம். அந்த வாகனத்தை ஆலங்குளம் கோர்ட்டு விடுவித்தது. இதனால் பிரதான வழக்கின் விசாரணை பாதிக்கப்படும். எனவே லாரியை விடுவித்து ஆலங்குளம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் அரசு வக்கீல் டி.செந்தில்குமார் ஆஜராகி, உயிரி மருத்துவக்கழிவு மேலாண்மை விதிகளை மீறி கேரளாவில் இருந்து 75 கிலோ மீட்டர் தூரம் தமிழகத்துக்குள் வந்து மருத்துவக்கழிவுகளை கொட்டி உள்ளனர். ஏற்கனவே மருத்துவக்கழிவுகளை கொண்டு வரும் வாகனங்களை நமது மாநில எல்லை சோதனை சாவடிகளில் அனுமதிக்கக்கூடாது என அரசு உத்தரவிட்டது. அதை மீறி தமிழகத்துக்குள் நுழைந்து மருத்துவ கழிவுகளை கேரள லாரி கொட்டியுள்ளது. அந்த லாரியை இடைக்காலமாக விடுவித்தது ஏற்புடையதல்ல என வாதிட்டார்.

விசாரணை முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

கேரள மருத்துவக்கழிவுகளை தமிழக பகுதிகளில் கொட்டுவதை எதிர்த்து 2018-ம் ஆண்டில் மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்சில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அதை விசாரித்த ஐகோர்ட்டு, தமிழக எல்லைப்பகுதியில் கேரள மருத்துவக்கழிவுகளை கொட்டுவதை அனுமதிக்கக்கூடாது என உத்தரவிட்டது. ஆனாலும் அதிக அளவில் மருத்துவக்கழிவுகளை மாநில எல்லையோரத்தில் கொட்டியுள்ளனர். இதை தட்டிக்கேட்டவர்களை மிரட்டியுள்ளனர்.

உயிரி மருத்துவக் கழிவுகளை முறையாக மேலாண்மை செய்து அப்புறப்படுத்துவது அவசியம். இந்த கழிவுகளால் சுற்றுச்சூழலும், பொதுமக்களும் பாதிக்கப்படாதவாறு பாதுகாக்க வேண்டும். அந்த வகையில் சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தும் மருத்துவக்கழிவை ஏற்றி வந்த லாரியை கீழ்கோர்ட்டு விடுவித்து இருக்கக்கூடாது. இது, அவர்களை ஊக்கப்படுத்துவதாக அமைகிறது. மேலும் மருத்துவக்கழிவு மேலாண்மை விதி, ஐகோர்ட்டு ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுகளை கருத்தில் கொள்ளாமல் கீழ்கோர்ட்டு நீதிபதி, வாகனத்தை விடுவித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

மருத்துவக்கழிவுகளை கொட்டுபவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து, சட்ட ஆலோசனை பெறப்பட்டு உள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு பாராட்டத்தக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனவே வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வந்து மருத்துவக்கழிவுகளை கொட்டுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டதிருத்தம் கொண்டு வருவதற்கு இதுவே, சரியான தருணம்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்