சரக்கு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சுங்க கட்டணம் உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சரக்கு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2023-04-01 12:23 GMT

இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் பயணிக்க குறிப்பிட்ட கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இந்த கட்டணத்தை வசூலிக்க தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை சுங்கச்சாவடி கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை 5 முதல் 10 சதவீதம் உயர்த்த தேசிய நெடுஞ்சாலைகள் திட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

அதன்படி இன்று முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டு வசூலிக்கப்படுகிறது.

தமிழகத்தில் 55 சுங்கச்சாவடிகளில் 29 சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

அவற்றில் ரூ.5 முதல் ரூ.55 வரை கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சுங்க கட்டணம் உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவண்ணாமலை மாவட்ட சரக்கு லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் திருவண்ணாமலை அடுத்த அய்யம்பாளையம் பைபாஸ் சந்திப்பு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட துணைத்தலைவர் சந்தோஷ்குமார் தலைமை தாங்கினார்.

இதில் சுங்க கட்டணம் உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்தும், காலாவதியான 32 சுங்கச்சாவடிகளை அகற்றக் கோரியும் கோஷங்கள் எழுப்பினர். இதில் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்