தமிழகத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக உள்ளதால் தொழில் முதலீடுகள் குவிகின்றன - முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு

முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கான இலச்சினையை முதல் -அமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்

Update: 2023-08-10 15:13 GMT

சென்னை,

அடுத்தாண்டு ஜனவரியில் 7, 8 ஆகிய தேதிகளில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த நிலையில் இன்று சென்னை ஆர்.ஏ.புரத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 இலச்சினை வெளியீட்டு விழா இன்று நடந்தது.இந்த விழாவில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கான இலச்சினையை முதல் - அமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.

பின்னர் பேசிய முதல் -அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியதாவது ,

"தமிழ்நாட்டில் 2 ஆண்டுகளில் 240 ஒப்பந்தங்கள் மூலம் 2.96 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் 4.14 லட்சம் வேலை வாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. திமுக ஆட்சியில் தொழில் முதலீடுகள் குவிந்து வருகின்றன. தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு, உள்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக உள்ளதால் தொழில் முதலீடுகள் குவிகின்றன. கலைஞர் கருணாநிதி ஆட்சியில் தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சி அடைந்தது. தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியனாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.கடந்த இரண்டு ஆண்டுகளில், தொழில் வளர்ச்சியிலும், பொருளாதாரத்திலும் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது. சமீபத்தில், நிதி ஆயோக் வெளியிட்ட ஏற்றுமதி தயார்நிலை குறியீடு தரவரிசைகளின்படி, 80.89 புள்ளிகளுடன் அகில இந்திய அளவில் முதல் இடத்தை பெற்றுள்ள தமிழ்நாடு, மின்னணுவியல் ஏற்றுமதியிலும் முதல் இடத்தில் உள்ளது. மேலும், அதிக எண்ணிக்கையில் தொழிற்சாலைகள் மற்றும் பணியாளர்களை கொண்ட மாநிலங்களில் முதலிடத்திலும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கையில், அகில இந்திய அளவில், இரண்டாவது இடத்திலும் உள்ளது. எனத் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்