வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகள் திருட்டு

Update: 2022-09-04 15:59 GMT


தாராபுரம் அருகே வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் உரிமையாளர் வீட்டில் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகளை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கடை உரிமையாளர்

தாராபுரத்தை அடுத்த கொளத்துப்பாளையத்தை சேர்ந்தவர் ரபிதீன் (வயது45). இவர் பெங்களூருவில் வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ரபிதீன் கொளத்துப்பாளையம் வந்துள்ளார்.

பிறகு ரபிதீன் மனைவியிடம் பெங்களூரு செல்லலாம் என கூறியுள்ளார். இதையடுத்து வீட்டை பூட்டிவிட்டு மனைவி ஷர்மிளா பானுவை அழைத்துக்கொண்டு ரபிதீன் பெங்களூரு சென்று அங்கு குடும்பத்துடன் தங்கியுள்ளார். இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி இரவு ரபிதீன் தம்பி பரூக் கொளத்துப்பாளையத்தில் உள்ள ரபிதீன் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார்.

10 பவுன் நகைகள் திருட்டு

அப்போது ரபிதீன் முன்வாசல் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்ட பரூக் தனது அண்ணன் ரபிதீனுக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தார். தகவல் அறிந்த ரபிதீன் குடும்பத்துடன் புறப்பட்டு வருவதாகவும் அதுவரை யாரும் வீட்டிற்குள் செல்ல வேண்டாம் என கூறினார். பிறகு நேற்று முன்தினம் காலையில் வீட்டுக்கு வந்த ரபிதீன் போலீசில் தகவல் கொடுத்தார். இதனையடுத்து தாராபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு தனராசு தலைமையில் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் சம்பவம் நடந்த வீட்டிற்கு வந்து விசாரணை செய்தனர். விசாரணையில் ரபிதீன் வீட்டின் பீரோவில் இருந்த 10 பவுன் நகைகள் திருட்டு போனது ெதரியவந்தது.

கைரேகை நிபுணர்கள்

இதையடுத்து பிறகு கைரேகை நிபுணர்களை வரவழைத்து மர்ம ஆசாமிகளின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து நேற்றுமுன்தினம் இரவு 10 மணிக்கு ரபிதீன் தாராபுரம் குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ரபிதீன் பெங்களூரு சென்றதை அறிந்து கொண்ட மர்ம ஆசாமிகள், அவருடைய வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த நகையை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து நகைகளை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்