3 பெண்களிடம் தங்கச்சங்கிலி பறிப்பு

கோவையில் அடுத்தடுத்து 3 பெண்களிடம் தங்கச்சங்கிலி பறித்த 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2023-08-26 20:15 GMT
கோவை, ஆக.27 -


கோவையில் அடுத்தடுத்து 3 பெண்களிடம் தங்கச்சங்கிலி பறித்த 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.


நகை பறிப்பு


கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் கமலம்மாள் (வயது73). இவர் காலை 5.30 மணியளவில் அவினாசி ரோடு தண்டுமாரியம்மன் கோவிலுக்கு வெளியே நின்று கொண்டு இருந்தார். அப்போது முககவசம், ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கமலம்மாளின் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்கச்சங்கிலியை திடீரென்று பறித்தனர்.


இதையடுத்து அவர்கள் மற்றொரு மோட்டார் சைக்கிள் வந்த தங்களின் கூட்டாளிகள் 2 பேருடன் அங்கிருந்து தப்பி சென்றனர். இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


கோலம்போட்ட பெண்


காந்திபுரம் டாடாபாத்தை சேர்ந்தவர் ஜானகி (50). இவர் காலை 6 மணியளவில் வீட்டு வாசல் முன்பு தண்ணீர் தெளித்து கோலம் போட்டுக்கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமிகள், ஜானகியிடம் விலாசம் கேட்பதுபோல் நடித்து, அவர் அணிந்து இருந்த 4 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றனர். இதுகுறித்து ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


இதையடுத்து சிறிது நேரத்தில் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் வீட்டின் அருகே நின்ற லதா (50) என்பவர் கழுத்தில் அணிந்து இருந்த 7 பவுன் தங்கச்சங்கிலியை மர்ம நபர்கள் பறிக்க முயன்றனர். ஆனால் அவர் தங்கச்சங்கிலியை கெட்டியாக பிடித்துக் கொண்டார்.


ஆனாலும் மர்ம நபர்கள் பிடித்து இழுத்த போது கையில் கிடைத்த 2½பவுன் சங்கிலியுடன் தப்பிச் சென்றனர். இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து நகை பறிப்பு ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.


7 தனிப்படைகள்


இது குறித்து கோவை வடக்கு பகுதி துணை கமிஷனர் சந்தீஷ் கூறுகையில், 3 நகைபறிப்பு சம்பவங்களிலும் 4 பேர் ஈடுபட்டது கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி மூலம் தெரிய வந்துள்ளது.


மேலும் அவர்கள் ஓட்டி வந்தது திருட்டு மோட்டார் சைக்கிள்கள் ஆகும். அவற்றை வெரைட்டிஹால்ரோடு, பெரிய கடை வீதி பகுதிகளில் திருடி உள்ளனர். நகைப்பறிப்பு ஆசாமிக ளை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் காலை நேரத்தில் தீவிர ரோந்து செல்ல போலீசாருக்கு உத்தர விடப்பட்டு உள்ளது, என்றார்.


மேலும் செய்திகள்