சூரியனை ஆய்வுசெய்ய செல்கிறது; விண்ணில் ஏவ தயார் நிலையில் 'ஆதித்யா எல்-1' விண்கலம் - கவுண்ட்டவுன் நாளை தொடக்கம்
சூரியனை ஆய்வு செய்ய உள்ள ‘ஆதித்யா எல்-1’ விண்கலத்துடன் ஸ்ரீஹரிகோட்டாவில் பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் விண்ணில் ஏவ தயார் நிலையில் இருக்கிறது. இதற்கான கவுண்ட்டவுன் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது என்று விஞ்ஞானிகள் கூறினர்.;
சூரியனில் உள்ள காந்தப்புயல் பூமியில் இருக்கும் அனைத்து மின்னணு சாதனங்களையும் செயலிழக்க வைத்து விடும் திறன் கொண்டதாகும். தற்போதைய சூழ்நிலையில் உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான அணு உலைகள் மின்னணு சாதனங்கள் உதவியுடன் பாதுகாப்பாக கையாளப்படுகின்றன.
இந்த நிலையில், காந்த புயல் காரணமாக இவை பாதிக்கப்பட்டால் பேரழிவு ஏற்படும். எனவே காந்த புயல்களை முன்கூட்டியே கணிக்கவும், சூரியனின் பல்வேறு அடுக்குகளை ஆய்வு செய்யவும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) முடிவு செய்தது. இதற்காக 'ஆதித்யா எல்-1' என்ற புதிய விண்கலத்தை வடிவமைத்தது.
விண்கலத்தில் உள்ள 7 ஆய்வு கருவிகளை பெங்களூருவில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனம் வடிவமைத்து உள்ளது. இந்தியா சார்பில் முதன்முதலில் சூரியனை கண்காணிக்கவும், ஆய்வு செய்யவும் அனுப்பப்படும் முதல் விண்கலம் இதுவாகும். சூரியனின் வெப்பம் காந்த துகள்கள் வெளியேற்றம் விண்வெளியின் காலநிலை விண்வெளியில் உள்ள துகள்கள் குறித்து 'ஆதித்யா எல்-1' ஆய்வு செய்யும்.
பூமியில் இருந்து சுமார் 15 லட்சம் கி.மீ. தொலைவில் 'லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன்' என்னும் இடத்தில் இந்த விண்கலம் நிலை நிறுத்தப்பட உள்ளது. இது சூரியனை நோக்கிய கோணத்தில் வைக்கப்படுகிறது.
பெங்களூருவில் உள்ள யூ.ஆர்.ராவ் செயற்கைகோள் மையத்தில் தயாரிக்கப்பட்ட இந்த விண்கலம் தற்போது ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திற்கு கொண்டுவரப்பட்டு இறுதி கட்ட சோதனைகள் முடிக்கப்பட்டு ராக்கெட்டில் பொருத்தப்பட்டுள்ளது.
திட்டமிட்டபடி வருகிற 2-ந்தேதி (சனிக்கிழமை) காலை 11.50 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் 'ஆதித்யா எல்-1' விண்கலம் விண்ணில் ஏவப்படுகிறது.
இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. குறிப்பாக இறுதிக்கட்டப்பணியான 24 மணி நேர கவுண்ட்டவுன் நாளை காலை 11.50 மணிக்கு தொடங்க இருப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.