தியாகதுருகம் வாரச்சந்தையில் ரூ.75 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை

தீபாவளி பண்டிகையையொட்டி தியாகதுருகம் வாரச்சந்தையில் ரூ.75 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை 4 மணி நேரத்துக்குள் 800 ஆடுகள் விலைபோனது

Update: 2022-10-22 18:45 GMT

கண்டாச்சிமங்கலம்

தியாகதுருகத்தில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை அன்று வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இங்கு தியாகதுருகம், ரிஷிவந்தியம், சங்கராபுரம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் வளர்த்து வரும் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். நாளை(திங்கட்கிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் நேற்று நடைபெற்ற வாரசந்தையில் விவசாயிகள் தங்களின் ஆடுகளை விற்பனைக்காக இங்கு கொண்டு வந்தனர். வழக்கத்தைவிட சுமார் 800-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இதனால் சந்தை களை கட்டியது. ஆடுகளை வாங்குவதற்காக உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் வாகனங்களில் வந்திருந்தனர். பின்னர் அவர்கள் விவசாயிகளிடம் போட்டி போட்டு ஆடுகளை வாங்கி சென்றனர். நேற்று நடைபெற்ற சந்தையில் சுமார் ரூ.75 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இது குறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், தீபாவளி பண்டிகை என்பதால் கூடுதல் விலைக்கு விற்கலாம் என விவசாயிகள் பலரும் தங்கள் ஆடுகளை விற்பனைக்காக இங்கு கொண்டு வந்தனர். இதனால் வியாபாரிகளும் ஆடுகளை போட்டிபோட்டு ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். ஒரு ஆடு குறைந்த பட்சம் ரூ.7 ஆயிரத்துக்கும் அதிக பட்சம் ரூ.22 ஆயிரத்துக்கும், குட்டி ஆடு ஒன்று குறைந்த பட்சம் ரூ.3 ஆயிரத்துக்கும், அதிகபட்சம் ரூ.6 ஆயிரம் வரைக்கும் விலைபோனது. அனைத்து ஆடுகளும் சந்தை தொடங்கிய காலை 6 மணி முதல் 10 வரை சுமார் 4 மணி நேரத்துக்குள் விற்பனையாகிவிட்டன. நேற்று நடைபெற்ற சந்தையில் சுமார் ரூ.75 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்று இருக்கலாம் என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்