ரெயில் நிலையத்தில் நடனமாடி ரீல்ஸ் வெளியிட்ட இளம்பெண்கள் கைது

ரெயில் நிலையத்தில் `மே மாதம் 98-ல் மேஜர் ஆனேனே' என்ற பாடலுக்கு இளம்பெண்கள் நடனமாடினர்.;

Update:2024-05-22 07:21 IST

திருச்சி,

திருச்சி கோட்டை ரெயில் நிலையத்தில் கடந்த 6-ந்தேதி 3 இளம்பெண்கள் நடனமாடி அதை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர். மாதவன் நடித்த ஜே.ஜே. திரைப்படத்தில் நடிகை ரீமாசென் `மே மாதம் 98-ல் மேஜர் ஆனேனே' என்ற பாடலுக்கு நடனமாடினார்.. அந்த பாடல் ரெயில் நிலையத்தில் படமாக்கப்பட்டு இருக்கும். இதேபோல் 3 இளம்பெண்களும் ஜீன்ஸ் மற்றும் கருப்பு பனியன் அணிந்தபடி, ரெயில் நிற்பது போன்ற பின்னணியில் அதே பாடலுக்கு நடனமாடி வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பகிர்ந்து வைரலானது.

குறிப்பாக பஸ் நிலையம், ரெயில் நிலையம், விமான நிலையங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையிடம் முன் அனுமதி பெற்றே நடத்தப்படும். ஆனால் இந்த இளம்பெண்கள் எந்தவித முன் அனுமதியும் இன்றி ரெயில் நிலையத்தில் நடனமாடி ரீல்ஸ் எடுத்து வெளியிட்டு இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் இதுபோன்று ரெயில் நிலையத்தில் நடனமாடி ரீல்ஸ் எடுப்பது, பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தும் செயல் என கூறி சமூக ஆர்வலர்கள் பலரும் தங்களது கண்டனங்களை சமூக வலைதளத்தில் தெரிவித்து வந்தனர். இதற்கிடையே அந்த இளம்பெண்கள் நடனமாடி ரீல்ஸ் வெளியிட்டது கோட்டை ரெயில் நிலையம் என தெரியவந்தது.

இதையடுத்து திருச்சி ரெயில்வே கோட்ட மூத்த பாதுகாப்பு கமிஷனர் அபிஷேக் இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், உதவி பாதுகாப்பு கமிஷனர் பிரமோத் நாயர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் செபாஸ்டியன், சப்-இன்ஸ்பெக்டர் ரேஷ்மா உள்ளிட்ட ரெயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அப்போது அந்த இளம்பெண்கள் நடனமாடி ரீல்ஸ் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

இதில் அந்த இளம்பெண்கள் 3 பேர் மற்றும் அந்த ரீல்சை வீடியோ எடுத்த வாலிபர் ஆகியோர் திருச்சி பாலக்கரையை சேர்ந்தவர்கள் எனவும், அவர்கள் 4 பேரும் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, திருச்சியில் உள்ள நடன பள்ளியில் பயின்று வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து நேற்று ரெயில்வே பாதுகாப்பு படையினர் அவர்கள் மீது தடையை மீறி வீடியோ எடுத்தது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, 4 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களுக்கு அபராதம் விதித்து, இனிமேல் இதுபோன்று பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக ரீல்ஸ் எடுக்கக்கூடாது என எச்சரித்து ஜாமீனில் அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்