கார் மோதி சிறுமி பலி - உறவினர்களின் சாலை மறியலால் பரபரப்பு...!

திருவெண்ணெய்நல்லூர் அருகே கார் மோதி சிறுமி உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து உறவினர்கள் சாலை மறியல் செய்தனர்.

Update: 2022-06-29 11:23 GMT

திருவெண்ணெய்நல்லூர்,

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள இருவேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மகள் கவிநிலவு(வயது8). இவர் காரப்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார்.

சிறுமி கவிநிலவுக்கு உடல்நிலை சரியில்லாததால் இவரது உறவினர் ஈஸ்வரி என்பவர் இன்று காலை இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்து சென்று உள்ளார்.

இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பி கொண்டிருந்தனர். இவர்கள் இருவேல்பட்டு பஸ் ஸ்டாப்பில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் இவர்கள் மீது மோதியது.

இந்த விபத்தில் சிறுமி கவிநிலவு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உறவினர் ஈஸ்வரி பலத்த காயம் அடைந்தார். ஈஸ்வரியை அப்பகுதியினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த உறவினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, விழுப்புரம் போலீஸ் துணை சூப்பிரண்டு பார்த்திபன், திருவெண்ணெய்நல்லூர் தாசில்தார் பாஸ்கரதாஸ், திருவெண்ணெய்நல்லூர் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது, இந்த சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

இந்த சாலை மறியலால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்